

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர், கடந்த மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த தர்மமுனீஸ்வரன் என்பவரைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தர்மமுனீஸ்வரன் ஏற்கனவே ஒரு மூதாட்டியைக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, பின்னர் உயர்நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்டு வெளியே இருந்தவர் என்பது தெரியவந்தது.
இந்த நிலையில் மாணவியின் பெற்றோர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
நாங்கள் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எங்கள் வீட்டில் தனி கழிப்பறை வசதி இல்லாததால், கடந்த 10-ம் தேதி இயற்கை உபாதை கழிப்பதற்காக எங்கள் மகள் வெளியே சென்றிருந்தாள்.
மகள் வீடு திரும்பாததால் முதலில் குளத்தூர் காவல் நிலையத்தை அணுகினோம். அங்குள்ள போலீசார் எங்களை மிகவும் இழிவாகப் பேசியதுடன், நடவடிக்கை எடுக்காமல் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் செல்லுமாறு திருப்பி அனுப்பினர். அங்கேயும் வழக்குப்பதிவு செய்யாமல் மீண்டும் குளத்தூர் காவல் நிலையத்திற்கே எங்களை அலைக்கழித்தனர்.
இதற்கிடையே எங்கள் உறவினர்கள்தான் மகளைப் பிணமாகக் கண்டுபிடித்தனர். அவள் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுத் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருந்தாள்.
ஏற்கனவே ஒரு மூதாட்டி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் தர்மமுனீஸ்வரனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மதுரை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கியது. அந்த ஜாமீனில் வெளியே இருந்தபோதுதான் அவர் எங்கள் மகளைக் கொலை செய்துள்ளார். எனவே அந்தப் பழைய வழக்கில் எங்களை எதிர்மனுதாரராகச் சேர்த்து, தர்மமுனீஸ்வரனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.