

சென்னை,
நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகள் 16 வழி, 8 வழி மற்றும் 4 வழிச்சாலைகளாக மாற்றிடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் தொடங்கி தெற்கே துறைமுக நகரமான தூத்துக்குடி வரையில் 690 கி.மீ. தூரம் (NH-32) 4 வழிச்சாலை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இத்திட்டம் நீட்டிக்கப்பட்டு தூத்துக்குடியில் தொடங்கி கோவில் நகரமான திருச்செந்தூர் அருகே கடந்து கிழக்கு எல்லையான கன்னியாகுமரிக்கு புதிய 4 வழிச்சாலைதிட்டம் அமைக்கப்பட உள்ளது.
இத்திட்டம் தூத்துக்குடி -திருச்செந்தூர்-கன்னியாகுமரி (NH-32) TTK சாலை என கூறப்படுகிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் 25 கிராமங்கள், திருநெல்வேலி மாவட்டத்தில் 11 கிராமங்கள் என மொத்தம் சுமார் 106.9 கி.மீ. தொலைவில் புதிதாக 4 வழிச்சாலை திட்டம் அமைகிறது. இதற்காக 853.09 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் புதுக்கோட்டை அருகில் முடிவைத்தானேந்தல் கிராமத்தில் தொடங்கி கட்டாலங்குளம், நட்டாத்தி, சிறுத்தொண்டநல்லூர், ஆறுமுகமங்கலம், கொட்டாரக்குறிச்சி, வாழவல்லான், சுகந்தலை, சேதுக்குவாய்த்தான். அங்கமங்கலம், நல்லூர், ஆறுமுகநேரி, அம்மன்புரம், மூலக்கரை, நத்தகுளம், கந்தசாமிபுரம், மேல திருச்செந்தூர், கீழ திருச்செந்தூர், குலசை, உடன்குடி, ஆதியாக்குறிச்சி, பள்ளக்குறிச்சி, படுக்கப்பத்து, திருப்பணி புத்தன்தருவை, நெல்லை மாவட்டத்தின் குட்டம், உவரி, கரைச்சுத்து புதூர், கூடங்குளம், இருக்கன்துறை 1,2, லெவிஞ்சிபுரம் வழியாக அஞ்சுகிராமத்திற்கு சற்று முன்னதாக கருங்குளத்தில் நெல்லை - கன்னியாகுமரி 4 வழிச்சாலை திட்டத்தில் இணைக்கப்பட உள்ளது.
இத்திட்டத்தில் தற்போது முதற்கட்டமாக நெடுஞ்சாலைத்துறை சாலை அமைக்கப்படும் வழித்தடம் குறித்து வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து 21 நாட்களுக்குள் பொது மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்குமாறு அறிவிக்கப் பட்டுள்ளது. அதன் பிறகு நிலம் கையகப்படுத்துவதற்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டு அதனை தொடர்ந்து வழித்தட கற்கள் பதிக்கப்பட உள்ளது. இப்பணிகள் நிறைவடைந்த பிறகு சாலை அமைக்கும் பணி தொடங்க உள்ளது. இத்திட்டத்தால் பயண நேரம் மற்றும் தூரம் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது