

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே வீட்டின் வாசலில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் அருகே கீழப்பள்ளிபத்து பகுதியைச் சேர்ந்தவர் தங்கதுரை. இவரது மனைவி பானுமதி (71). இந்த தம்பதியருக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். பிள்ளைகள் அனைவரும் வேலை மற்றும் வாழ்வாதாரத்திற்காக வெளியூர்களில் குடும்பத்துடன் வசித்து வருவதால், பானுமதி மட்டும் தனது வீட்டில் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை வீட்டின் முற்றத்தை சுத்தம் செய்வதற்காக பானுமதி வாசலில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு மின்சார இணைப்பு கொண்டு வருவதற்காக அமைக்கப்பட்டிருந்த இரும்பு மின் கம்பியில் திடீரென மின்கசிவு ஏற்பட்டிருந்ததாக தெரிகிறது.
இதனை அறியாத பானுமதி, தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அந்த மின் கம்பியைத் தொட்டுள்ளார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், வழக்குப் பதிவு செய்து மின்கசிவு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.