தூத்துக்குடி: பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 25-ந்தேதி தேதி தீர்ப்பு

வழக்கில் அனைத்து தரப்பு விசாரணைகளும் தற்போது முடிவடைந்துள்ளது.
தூத்துக்குடி: பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 25-ந்தேதி தேதி தீர்ப்பு
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி கடந்த மார்ச் 10 ஆம் தேதி வீட்டில் இருந்து இரவு வேளையில் அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு இயற்கை உபாதைக் கழிக்க சென்ற நிலையில், காணாமல் போனார். கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் ஒரு நாள் முழுவதும் தேடிய நிலையில், கடந்த 11 ஆம் தேதி அதே காட்டுப் பகுதியில் உடலில் பல்வேறு இடங்களில் காயத்துடன் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தபட்டதற்கான அறிகுறிகளுடன் மாணவி உடல் சடலமாக மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு ரவுடி தர்ம முனீஸ்வரன் என்பவர் இந்த கொலையை செய்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன் ஏற்கனவே கோவில்பட்டியில் ஒரு வயதான மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் ஆவார். அந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமின் பெற்று, தினமும் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்த நிலையில்தான் பிளஸ்-2 மாணவியையும் கொடூரமாகக் கொலை செய்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் அனைத்து தரப்பு விசாரணைகளும் தற்போது முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) அறிவிக்க உள்ளதாக தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com