தூத்துக்குடி: பெண் கொலை வழக்கு குற்றவாளி தடுப்பு காவல் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் பகுதியில் நடந்த பெண் கொலை வழக்கில், படுகாயமடைந்து 6 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவரது கணவர் உயிரிழந்தார்.
தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் கைது.
Published on: 

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் நடந்த பெண் கொலை வழக்கில், படுகாயமடைந்து 6 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவரது கணவர் உயிரிழந்ததால், ஏற்கெனவே கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காதல் தொடர்பாக முன்விரோதம்

தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முதலூர் பகுதியைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் (வயது 51) என்பவரது குடும்பத்தினருக்கும், சாத்தான்குளம் ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த இஸ்ரவேல் மகன் ஞானபிரகாஷ்(23) என்பவருக்கும் இடையே, முத்துக்கிருஷ்ணனின் 15 வயது மகளுடன் ஞானபிரகாஷ் கொண்டிருந்த காதல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

பெண் அரிவாளால் வெட்டிக்கொலை

இந்த நிலையில் கடந்த 22.10.2026 இரவு முத்துக்கிருஷ்ணனின் வீட்டிற்குச் சென்ற ஞானபிரகாஷ், அவர்களுடன் தகராறில் ஈடுபட்டு முத்துக்கிருஷ்ணன், அவரது மனைவி மேரிவிஜிலா(40) மற்றும் அவர்களது 12 வயது மகன் ஆகியோரை அரிவாளால் தாக்கியுள்ளார். இதில் மேரிவிஜிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

படுகாயமடைந்த பெண்ணின் கணவர் உயிரிழப்பு

இதில் படுகாயமடைந்த முத்துகிருஷ்ணன் மற்றும் அவரது 12 வயது மகன் ஆகிய இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 6 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (28.10.2026) இரவு முத்துகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

குற்றவாளி மீது தடுப்பு காவல் சட்டத்தில் நடவடிக்கை

மேலும் இந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட நபரான ஞானபிரகாஷ் சம்பவம் நடந்த அன்றே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மேலும் அவர் மீது தட்டார்மடம் காவல் நிலைய போலீசார், மாவட்ட எஸ்.பி. உத்தரவின்படி தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

X