

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள அங்கமங்கலம் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர், சென்னை சென்று வசித்து வந்த நிலையில், குடும்ப தகராறு காரணமாக கணவரைப் பிரிந்து அங்கமங்கலத்தில் உள்ள தனது தாய் வீட்டில் மகளுடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கேண்டீனில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் கீழக்கல்லாம்பாறையைச் சேர்ந்த உப்பிலி என்பவரது மகன் இமான்(எ) வைகுண்டம் (வயது 28), கடந்த 8 மாதங்களாக அந்தப் பெண்ணிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேர பணியை முடித்துவிட்டு, அப்பெண் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, வழியில் வந்த வைகுண்டம் எதிர்பாராதவிதமாக அவரது கையைப் பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின் பேரில், குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள வைகுண்டத்தை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.