தூத்துக்குடி: தனியார் குடோனில் மூடை சரிந்து தொழிலாளி பலி- நிவாரணம் கோரி உறவினர்கள் முற்றுகை போராட்டம்

தூத்துக்குடி சிப்காட் பகுதியிலுள்ள ஒரு தனியார் கண்டெய்னர் ஏற்றுமதி நிறுவனத்தில் கடந்த 8 ஆண்டுகளாக மூடை சுமக்கும் தொழிலாளியாக கண்ணன் வேலை பார்த்து வந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் தாலுகா, இளவேலங்கால் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவர் தூத்துக்குடி சிப்காட் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் கண்டெய்னர் ஏற்றுமதி நிறுவனத்தில் கடந்த 8 ஆண்டுகளாக மூடை சுமக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 30ம்தேதி மாலை குடோனில் பணியில் இருந்தபோது, மூடை சரிந்து விழுந்ததில் கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் காவல்துறையினர் கண்ணனின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மேலும் விபத்து குறித்து விசாரணை செய்தனர். இதைத்தொடர்ந்து கண்ணனுக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளதால் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், இளவேலங்கால் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் கண்ணன் வேலை செய்த தனியார் நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், சிஐடியு மாவட்ட பொருளாளர் அப்பாதுரை, மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, சிபிஐஎம் கயத்தாறு ஒன்றிய செயலாளர் சாலமோன்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தார்கள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இதில் கண்ணன் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிவாரணமாக வழங்க ஏற்றுமதி நிறுவனம் உறுதி அளித்தது. இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.






