தூத்துக்குடி: சென்டர் மீடியனில் பைக் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழப்பு

தூத்துக்குடி, தெர்மல்நகர் சுனாமி காலனியில் உள்ள கோவிலில் கொடை விழா நடந்தது.
தூத்துக்குடி, தெர்மல்நகர் சுனாமி காலனியைச் சேர்ந்த ராஜ்குமார் மகன் பிரகாஷ் (வயது 28). இவரது தெருவில் உள்ள கோவிலில் கொடை விழா நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக, அவரது உறவினரான ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் ஜெயமுருகன்(24) என்பவர் பிரகாஷ் வீட்டுக்கு வந்திருந்தார்.
நேற்று இரவு கொடை விழா முடிந்ததும் ஜெயமுருகன் ஊருக்கு புறப்பட்டார். பிரகாஷின் நண்பரான திரேஸ்புரம் மாதவன்நாயர் காலனியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகன்(25), அவரை தூத்துக்குடி பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். புதிய துறைமுகம்- மதுரை பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பைக் நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முருகன், ஜெயமுருகன் ஆகிய இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் முருகன் பரிதாபமாக இறந்தார். ஜெயமுருகன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் தெர்மல்நகர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அய்யம்பிள்ளை வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ஷோபாஜென்ஸி விசாரணை நடத்தி வருகிறார்.






