தூத்துக்குடி: போக்சோ வழக்கில் வாலிபருக்கு வாழ்நாள் சிறை

தூத்துக்குடியில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி: போக்சோ வழக்கில் வாலிபருக்கு வாழ்நாள் சிறை
Published on

தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தூத்துக்குடி சோட்டையன் தோப்பு பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டி மகன் ராஜ்குமார் (வயது 35) என்பவரை தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா நேற்று (10.6.2025) குற்றவாளியான ராஜ்குமாருக்கு எஞ்சிய வாழ்நாள் முழுவதும் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் பிரேமா மற்றும் வனிதா, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலட்சுமி, விசாரணைக்கு உதவியாக இருந்த ஏட்டு ரபிலாகுமாரி ஆகியோரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் பாராட்டினார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com