

சென்னை,
தி.மு.க.வில் தோப்பு வெங்கடாசலம் கட்சி பதவி பறிக்கப்பட்ட நிலையில், அவர் த.வெ.க.வில் இணைய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த தோப்பு வெங்கடாலசம், பின்னர் தி.மு.க.வில் இணைந்தார். தி.மு.க.வில் அவருக்கு ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், அவருக்கும், முன்னாள் தி.மு.க. அமைச்சர் முத்துசாமிக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தி.மு.க.வில் தோப்பு வெங்கடாசலத்தின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் தோப்பு வெங்கடாசலத்தை அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஈரோடு மத்திய மாவட்டத்திற்குரிய சட்டமன்ற தொகுதிகளான பெருந்துறை தொகுதி ஈரோடு தெற்கு மாவட்டத்திலும், பவானி தொகுதி ஈரோடு வடக்கு மாவட்டத்திலும் இணைக்கப்பட்டு அந்தந்த மாவட்ட செயலாளர்கள் நிர்வகிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விரைவில் தோப்பு வெங்கடாசலம் தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி, த.வெ.க.வில் இணைவார் என்று தெரிகிறது.