தோரணமலை முருகன் கோவில் தைப்பூச திருவிழா - பிப்ரவரி 1-ந்தேதி நடக்கிறது


தோரணமலை முருகன் கோவில் தைப்பூச திருவிழா - பிப்ரவரி 1-ந்தேதி நடக்கிறது
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 16 Jan 2026 10:40 PM IST (Updated: 16 Jan 2026 10:47 PM IST)
t-max-icont-min-icon

தோரணமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா பிப்ரவரி 1-ந்தேதி நடக்க இருக்கிறது.

தென்காசி

தென்காசி மாவட்டம் கடையம் அருகே அகத்தியர், தேரையர் சித்தர்கள் வழிபட்ட தோரணமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தைப்பூச திருவிழா பிப்ரவரி 1-ந்தேதி நடக்க இருக்கிறது. அன்றைய தினம் காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, முருகப்பெருமானுக்கு பூஜை நடக்கிறது. காலை 5.30 மணிக்கு கணபதி ஹோமமும், 8 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி திருக்கல்யாணமும் நடக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்கிறார்கள். திருக்கல்யாணத்தை கணேச சிவாச்சாரியார், ஈஸ்வரன் சர்மா நடத்தி வைக்கின்றனர். அதனை தொடர்ந்து, ஊட்டி திருக்குந்த சப்பை படுகர் இன மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடக்கிறது.

மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை நடக்க உள்ளது. பக்தர்கள் எடுத்து வரும் பால்குடங்கள் மூலம் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மாலை 6 மணிக்கு கோவில் அடிவாரத்தில் மகா சரவண ஜோதி ஏற்றப்படுகிறது.

தொடர்ந்து இரவு 7 மணிக்கு முத்துமாலைபுரம் மறைந்த ஆதி நாராயணன்-சந்திராலீலா நினைவு மாலை நேர கட்டணமில்லா படிப்பக மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும், வள்ளியம்மாள்புரம் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளது. காலை முதல் இரவு வரை தொடர் அன்னதானமும் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் கே.ஏ.செண்பகராமன் செய்து வருகிறார்.

1 More update

Next Story