

புதுக்கோட்டை,
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை நடைபெற்றது பற்றி இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் சமீபத்தில் விமர்சித்து பேசினார்.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராவத், தலைமைத்துவம் என்பது முன்னணியில் நின்று வழிநடத்துவது. தலைமை வகிப்பதில் மிகவும் சிக்கலான விஷயம் என்னவெனில், நீங்கள் முன்னின்று செல்லும் போது, அனைவரும் உங்களை பின் தொடர்வார்கள். இது சாதாரண விசயம் அல்ல.
மிகவும் எளிமையான விஷயம் போல இது தோன்றும். ஆனால், இது மிகவும் சிக்கலான சூழலாகும். கூட்டத்திற்குள் கூட உங்களால் தலைவர்களை கண்டறிய முடியும். உங்களை சரியான திசையில் வழிநடத்தி செல்பவர்களே தலைவர்கள். தேவையற்ற வழியில் நடத்தி செல்பவர்கள் தலைவர்கள் அல்ல. வன்முறையை நோக்கி வழிநடத்துவது தலைமைத்துவம் இல்லை என்றார்.
அவரது இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. ராணுவ தளபதி ஒருவர் அரசியல் பேசியதற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான திருநாவுக்கரசர் புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் இந்த விவகாரம் பற்றி பேசும்பொழுது, ராணுவ தலைமை தளபதி உட்பட உயர் பொறுப்பில் இருப்பவர்கள் அரசியல் குறித்து பேசக்கூடாது. ராணுவ தளபதி கருத்து கூறாமல் தவிர்த்திருக்கலாம் என்று கூறினார்.