

பிரபல இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதையொட்டி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நெல்லை டவுன் அம்மன் சன்னதி தெருவில் உள்ள நெல்லை கண்ணன் வீட்டுக்கு வந்தார். அங்கு நெல்லை கண்ணன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரது மகன்களுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-
தன்னல நோக்கமில்லாத தமிழ் இனம் சார்ந்த மாமனிதர் நெல்லை கண்ணன். சங்க இலக்கியம், தொல்காப்பியம், நவீன இலக்கியம் என அனைத்தும் விரல் நுனியில் வைத்திருந்தார். தமிழ்த்தாய் தனது செல்ல மகனை, அன்பு மகனை இழந்து விட்டார். அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தமிழ் அறிஞர்களை பற்றி தெரியவில்லை. நெல்லை கண்ணன் மறைவு தமிழ் பேருலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.