சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் படுகொலையில் தொடர்புடையவர்களுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் - டி.டி.வி.தினகரன்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தை யாருக்காக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்? என்ற சந்தேகம் எழுகிறது என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குடிமங்கலம் காவல்நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் அவர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

திருவள்ளூர் ஊத்துக்கோட்டையில் மாந்தோப்பு காவலாளி படுகொலை, ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே இளைஞர் வெட்டிக் கொலை எனக் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அடுத்தடுத்து மூன்று படுகொலைச் சம்பவங்கள் அரங்கேறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாமானிய மக்கள் தொடங்கி அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள், காவல்துறையினர், அரசியல் கட்சித்தலைவர்கள் வரை யாருக்குமே பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தை யாருக்காக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்? என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொலை, கொள்ளைகள், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்புவதோடு, திமுக அரசின் மீதும் அதன் காவல்துறையின் மீதும் குற்றவாளிகளுக்குத் துளியளவும் பயமில்லை என்பதையே வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன.

எனவே, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் அவர்களின் படுகொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனையைப் பெற்றுத் தருவதோடு, இனியாவது சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கின் மீது கூடுதல் கவனம் செலுத்தி பொதுமக்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தருமாறு முதல்-ஆமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com