வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்துவோருக்கு கடும் தண்டனை தேவை: இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு விரைவான மற்றும் நியாயமான சட்ட நடவடிக்கை மூலம் தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
Published on: 

சென்னை,

தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்கவும், இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனை வழங்கவும் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியுள்ளது.

வழிபாட்டுத் தலங்கள்

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்க்கு எழுதியுள்ள கடிதத்தில்...

" தமிழ்நாடு மதச்சார்பின்மையிலும், மத நல்லிணக்கத்திலும் சிறந்து விளங்கும் மாநிலமாகும். இத்தகைய மாநிலத்தில் சமீப காலமாக வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுவது கவலையளிக்கிறது.

வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்களில் ஈடுபடுபவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்ற காரணத்தைக் கூறி, வழக்குகள் முடிவுக்குக் கொண்டுவரப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். அதேவேளையில், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எனக் கூறப்படும் நபர்கள் குறிப்பிட்ட வழிபாட்டுத் தலங்களை மட்டுமே குறிவைத்துத் தாக்கும் சம்பவங்கள் நிகழ்வது குறித்தும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.

சட்ட நடவடிக்கை

தமிழ்நாட்டில் எந்த மதத்தின் வழிபாட்டுத்தலமாக இருந்தாலும், அதன் மீது தாக்குதல் நடத்தினால் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது; கடுமையான சட்ட நடவடிக்கைகளையும் தண்டனைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற அச்சம் குற்றவாளிகளுக்கு ஏற்பட வேண்டும். அதுவே மத நல்லிணக்கத்தையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும்.

சிறப்புச் சட்டம்

எனவே, வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்க உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு விரைவான மற்றும் நியாயமான சட்ட நடவடிக்கை மூலம் தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். மேலும், தற்போதைய சட்டங்களின் போதாமையை ஆய்வு செய்து, தேவையானால் வழிபாட்டு தலங்களை பாதுகாப்பதற்கும், அவற்றின் மீது தாக்குதல் நடத்துவோருக்குக் கடுமையான தண்டனை வழங்குவதற்கும் உரிய சிறப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் எனத் தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

வலியுறுத்தல்

மதம், இனம், மொழி என்ற வேறுபாடின்றி அனைத்து மக்களும் அச்சமின்றி தங்களது வழிபாட்டு உரிமையைப் பின்பற்றும் சூழலை உருவாக்கி, தமிழ்நாட்டின் மதச்சார்பின்மையையும் சட்டம் ஒழுங்கையும் பாதுகாக்கத் தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com