சீமான் வீட்டை முற்றுகையிட முயன்றவர்கள் கைது

சீமானின் உருவபொம்மையை எரித்து போராடியவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
சீமான் வீட்டை முற்றுகையிட முயன்றவர்கள் கைது
Published on

சென்னை,

பெரியார் குறித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் சர்ச்சை பேச்சை கண்டிக்கும் வகையில், பெரியார் கூட்டமைப்பு மற்றும் மே 17 இயக்கத்தினர் இன்று காலை அவரது வீட்டை முற்றுகையிட உள்ளதாக அறிவித்திருந்தனர். முன்னதாக இது தொடர்பான சுவரொட்டிகள் சென்னை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தன. சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீடு முன்பாகவும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதனிடையே சென்னை நீலாங்கரையில் முற்றுகையிடும் அமைப்பினருக்கு எதிர்ப்பு தெரிவிக்க சீமான் வீடு முன்பாக ஏராளமான நாம் தமிழர் கட்சியினரும் நேற்று இரவு முதலே குவிந்திருந்தனர்.

இதனைத்தொடர்ந்து நீலாங்கரையில் உள்ள நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. பெரியார் கூட்டமைப்பு மற்றும் மே 17 இயக்கத்தினர் இன்று அவரது வீட்டை முற்றுகையிட உள்ள நிலையில், ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் பெரியாரை அவமதித்த சீமானை கைது செய்யக் கோரி போராட்டம் நடந்தது. இதன்படி மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் சீமான் வீடு அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனையடுத்து சீமானுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பெரியாரிய அமைப்புகளின் கூட்டமைப்பினர் கைது செய்யப்பட்டனர். சீமானின்உருவபொம்மையை எரித்து போராடியவர்களும் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே பாதுகாப்புக்காக நாம் தமிழர் கட்சியினரும் ஏராளமானோர் குவிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பும், பதற்றமும் நிலவியது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com