சான்றிதழ்களை சரியாக பதிவேற்றம் செய்யாதவர்களை கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் - டி.என்.பி.எஸ்.சி.க்கு ஐகோர்ட்டு உத்தரவு

இணையதளத்தில் சான்றிதழ்களை சரியாக பதிவேற்றம் செய்யாதவர்களை கவுன்சிலிங்கிற்கு அழைக்காததை ஏற்க முடியாது என்றும், அவர்களை நாளை (சனிக்கிழமை) நடைபெறும் கவுன்சிலிங்கில் அனுமதிக்க வேண்டும் என்றும் டி.என்.பி.எஸ்.சி.க்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சான்றிதழ்களை சரியாக பதிவேற்றம் செய்யாதவர்களை கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் - டி.என்.பி.எஸ்.சி.க்கு ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் 6 ஆயிரத்து 491 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 14-ந்தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவிப்பாணை வெளியிட்டது. இதன்படி, கடந்த செப்டம்பர் 1-ந்தேதி எழுத்து தேர்வு நடந்தது. இந்த எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தங்களது கல்வி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும்படி உத்தரவிடப்பட்டது.

இதில் சான்றிதழ்களை முறையாக பதிவேற்றம் செய்யவில்லை என்று காரணம் கூறி, பலரை கவுன்சிலிங்கிற்கு அழைக்கவில்லை. இதை எதிர்த்து கோவையை சேர்ந்த திருமலைச்சாமி, தர்மபுரியை சேர்ந்த தேவேந்திரன், திருவாரூரை சேர்ந்த கேசவமூர்த்தி உள்பட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல்கள் என்.ஜி.ஆர்.பிரசாத், சுங்கா சி.விஸ்வநாதன், பர்வீன்பானு லியாகத்அலி உள்பட பலர் ஆஜராகி வாதிட்டனர். அவர்கள் தங்களது வாதத்தில், எழுத்து தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ள மனுதாரர்கள், தங்களது கல்விச் சான்றிதழை தமிழக அரசின் இ-சேவை மையத்தில் இருந்து தான் பதிவேற்றம் செய்துள்ளனர். என்னென்ன சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது? என்ற ரசீதும் அந்த மையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் எல்லா ஆவணங்களும் சரியாக உள்ளன. ஆனால், அந்த மையத்தில் இருந்த ஊழியர்கள் சரியான பதிவேற்றம் செய்யாததற்கு மனுதாரர்கள் மீது குற்றம் சுமத்த முடியாது. எனவே, மனுதாரர்கள் அனைவரையும் கவுன்சிலிங்கிற்கு அழைக்க டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறினர்.

டி.என்.பி.எஸ்.சி. சார்பில் ஆஜரான வக்கீல் நிறைமதி, மனுதாரர்களுக்கு சான்றிதழை கூட சரியாக பதிவேற்றம் செய்ய தெரியவில்லை. அதனால், இவர்களை அடுத்தகட்ட தேர்வு நடவடிக்கையில் ஈடுபட அனுமதிக்க முடியாது என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ததில் ஏற்பட்ட சின்ன தவறுக்காக, தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ள மனுதாரர்களை கவுன்சிலிங்கிற்கு அழைக்கவில்லை. மனுதாரர்கள் செய்துள்ள சின்ன தவறுகள் எல்லாம் சரி செய்யக்கூடியதுதான். இதற்காக மனுதாரர்களை கவுன்சிலிங்கிற்கு அழைக்காமல் அவர்களை நிராகரிப்பது என்பது ஏற்க முடியாது. ஏற்கனவே கடந்த 19-ந்தேதி முதல் கவுன்சிலிங் தொடங்கி விட்டது.

எனவே, மனுதாரர்கள் அனைவரையும் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ள கவுன்சிலிங்கில் பங்கேற்க டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் செயலாளர் அனுமதிக்க வேண்டும். இந்த தேர்வு நடவடிக்கை அனைத்தும், இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையை வருகிற மார்ச் 9-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன் என்று உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com