

சென்னை,
அரசியலில் வெற்றிதான் முகவரியை கொடுக்கும். அதுதான் ஒரு கட்சியை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்கும். தொடர் தோல்விகளை சந்திக்கும் கட்சிகள் கலகலத்துபோவ துடன், காற்றில் வைத்த கற்பூரமாக கரைந்து காணாமல் போய்விடும் ஆபத்து இருக்கிறது. இதற்கு பல உதாரணங்கள் உள்ளன.
அப்படி ஓர் அபாயம்தான் இப்போது அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்டு இருக்கிறது. நெருக்கடிகள், சோதனைகள் என்பது அ.தி.மு.க.வுக்கு ஒன்றும் புதிது அல்ல. கடந்த காலங்களில் இதைவிட மோச மான பல சோதனைகளையும், நெருக்கடிகளையும் சந்தித்து அதிலிருந்து 'பீனிக்ஸ்' பறவையைப் போல மீண்டு எழுந்திருக்கிறது.
ஆனால் இப்போதைய நிலையில் கொஞ்சம் மாறுபாடு உள்ளது. அதாவது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல் மக்களை கவர்ந்து இழுக்கும் மாபெரும் தலைவர் ('மாஸ் லீடர்') யாரும் இல்லாத நிலையில், அ.தி.மு.க. மிகப்பெரிய சோதனைக்கு உள்ளாகி இருக்கிறது.
எம்.ஜி.ஆரை அடுத்து, அவருடன் ஏற்கனவே பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக விளங்கிய ஜெயலலிதா அ.தி.மு.க.வின் தலைமை பொறுப்புக்கு வந்தார். ஆனால் அவருக்கு பிறகு அந்த இடத்துக்கு வந்த எடப்பாடி பழனிசாமி சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். கட்சியில் அடிமட்ட தொண்டராக இருந்து படிப்படியாக உயர்ந்து, சூழ்நிலைகள் காரணமாக முதல்-அமைச்சர் நாற்காலியில் அமர்ந்ததோடு, தன்னை வலுப்படுத்திக் கொண்டு பொதுச் செயலாளரும் ஆனார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளுக்கும் தனி மனிதராக சென்று சென்று பிரசாரங்களை மேற்கொண்டார். அந்த வகையில் தொண்டனை தலைவனாக பெற்ற கட்சி என்ற பெருமை அ.தி.மு.க. வுக்கு உண்டு.
இந்தநிலையில், சென்னையில், அதிமுக முன்னாள் எம்.பி., சிவசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
அம்மா அவர்கள் சொன்னார்கள் 100 ஆண்டுகள் காலம் இந்த இயக்கம் இருக்கும் யாராலும் அசைக்க முடியாது என்று சொன்னார்கள் அதுபோல இந்த இயக்கத்திற்கு பல சோதனைகள் வந்தது. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மறைவிற்கு பிறகு கட்சிக்கு சோதனை வந்தது. அந்த சோதனையை வென்றெடுத்து புரட்சி தலைவி அம்மா பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். அதற்கு பின்னாலே ஒரு சோதனை வந்தது. அந்த சோதனையையும் மீட்டெடுத்து அண்ணன் எடப்பாடியார் அவர்கள் இந்த அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்றார். இன்றைக்கு ஒரு சோதனை வந்திருக்கிறது.
அந்த சோதனையை பொறுத்தவரைக்கும் இது சோதனையே இல்லை. இவ்வளவு காலம் வந்ததெல்லாம் சோதனை என்றே சொல்லலாம். ஆனால் இன்றைக்கு சிலர் தங்கள் சுயநலத்திற்காக சுய லாபத்திற்காக பதவி சுகபோகத்திற்காக அவர்கள் வேறு இடத்திற்கு சென்று இருக்கிறார்கள். அதனைத்தான் சொல்ல முடியும்.இன்றைக்கு இந்த இயக்கம் தூய்மைபடுத்தப்பட்டுள்ளது. கட்சியில் இருந்து ஒருவர் வெளியே செல்கிறார் என்றால் 100 பேர் உள்ளே வருகிறார்கள் அதுதான் இந்த இயக்கம்.
தவெகவிற்கு ஆதரவு தெரிவித்த 25 எம்.எல்.ஏக்கள் பதவிகள் பறிக்கப்படும். மீண்டும் தேர்தல் வரும் அண்ணன் எடப்பாடியார் யாரை சொல்கிறாரோ அவர் தேர்தலில் போட்டியிடுவார். அவர் வென்று சட்டசபையில் அமருவார். இந்த விவகாரத்தில் சபாநாயகருக்கு 3 மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அவர் பதிலை சொல்லவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடி வெற்றியை நிலைநாட்டுவோம். ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழு நடைபெறும். இப்போழுது பொதுக்குழுவை பொதுக்குழுவை கூட்ட அவசியமில்லை.
ஜெயலலிதா அம்மா இருந்திருந்தால் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்தவர்களை, அவர்கள் கொடுத்தபோதே அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே நீக்கியிருப்பார். அதிமுக வின் தோல்விக்கு நான் முதற்கொண்டு நாம் எல்லோரும் காரணம். நமது பிள்ளைகளிடம் அதிமுகவுக்கு ஒட்டுபோட வலியுறுத்தாமல் விட்டுவிட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.