கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், புதிய வைரசை கண்டு பயப்பட தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் புதிய வைரசை கண்டு பயப்பட வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், புதிய வைரசை கண்டு பயப்பட தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Published on

2-வது தவணை தடுப்பூசி செலுத்தவில்லை

காஞ்சீபுரம் மாவட்டம் கோவிலம்பாக்கம் ஊராட்சியில் நடந்த 20-வது மெகா தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் இதுவரை 9 கோடியே 39 லட்சத்து 87 ஆயிரத்து 902 பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 5 கோடியே 20 லட்சத்து 29 ஆயிரத்து 899 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 3 கோடியே 90 லட்சத்து 21 ஆயிரத்து 718 பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். அதேபோல் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட 33 லட்சத்து 46 ஆயிரம் பேரில், 25 லட்சத்து 91 ஆயிரத்து 788 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தகுதியுள்ள 4 லட்சத்து 48 ஆயிரத்து 394 பேரில், நேற்று (நேற்று முன்தினம்) மாலை வரை 3 லட்சத்து 44 ஆயிரத்து 397 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 97 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருக்கின்றனர். இவர்களை இலக்கு வைத்துதான் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது.

100 சதவீதம் தடுப்பூசி

தமிழகத்தில் 2 ஆயிரத்து 669 ஊராட்சிகளிலும், 24 நகராட்சிகளிலும் 100 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திக்கொண்டால்தான் எதிர்காலத்தில் எந்த வைரஸ் வந்தாலும், அதில் இருந்து காத்துக்கொள்ள முடியும். தற்போது ஏற்படுகிற கொரோனா உயிரிழப்புகளில் 95 சதவீதத்துக்கு மேலானவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் என்பது வருத்தமளிக்கிறது. பல்வேறு இணை நோயுடன் கொரோனா தொற்றும் ஏற்பட்டு, தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நிலையில் இருப்பவர்கள்தான் அதிகம் உயிரிழக்கின்றனர்.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 19 லட்சத்து 21 ஆயிரத்து 519 பேருக்கும், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட 13 லட்சத்து 15 ஆயிரத்து 474 பேருக்கும், உயர் ரத்த அழுத்த நோயும், நீரிழிவு நோயும் இணைந்து பாதிக்கப்பட்ட 9 லட்சத்து 71 ஆயிரத்து 990 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

நியூகோ வைரஸ்

அதேபோல் நோய் ஆதரவு சிகிச்சை சேவைகள் மூலம் 1 லட்சத்து 71 ஆயிரத்து 68 பேருக்கும், 3 லட்சத்து 27 ஆயிரத்து 851 பேருக்கு இயன்முறை சிகிச்சைகளும் என மொத்தம் 47 லட்சத்து 9 ஆயிரத்து 66 பேர் மக்களை தேடி மருத்தும் திட்டத்தில் பலன் பெற்றிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் முதன்முறையாக அரசின் மருத்துவ உதவிகளை பெற்றவர்கள் ஆவர். 39 லட்சத்து 4 ஆயிரத்து 894 பேர் தொடர் சிகிச்சை பெறுபவர்களாக உள்ளனர். அந்தவகையில் 86 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவ பெட்டகங்கள் தமிழகத்தில் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 திட்டத்தின் மூலம் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் 609 ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகின்றனர். தினசரி 60 முதல் 70 என்ற எண்ணிக்கையில் ஏற்பட்டு வந்த விபத்துகளினால் உண்டான உயிரிழப்பு, இந்த திட்டத்தின் மூலம் தற்போது பாதிக்கும் மேலாக குறைந்துள்ளது. தற்போது சீனாவில் நியூகோ என்ற புதிய வைரஸ் வவ்வாலால் ஏற்படுகிறது. இந்த வைரஸ் பரவல் மிக வேகமாக இருக்கும் எனவும், இந்த வைரசால் பாதிக்கப்பட்டால், 3 பேரில் ஒருவர் இறந்துவிடுவார் போன்ற செய்திகள் சமூக வளைதலங்களிலும், ஊடகங்களிலும் வந்த வண்ணம் இருக்கிறது. உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தாத வரை இதுபோன்ற செய்திகளை வெளியிட்டு பொதுமக்களை பதற்றமடைய செய்ய வேண்டாம்.

பயப்பட வேண்டாம்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் புதிய வைரசை கண்டு பயப்பட வேண்டாம். நிம்மதியாக இருக்கலாம். 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு மூலம் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்த அரசு பள்ளி மாணவர்களுக்கு டேப்லெட் வழங்க முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விதிமுறைகள் காரணமாக மாணவர்களுக்கு அதனை வழங்க முடியாது. தேர்தல் முடிந்த பிறகு மாணவர்களுக்கு டேப்லெட் வழங்கும் பணி முதல்-அமைச்சர் மூலம் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com