கள் உணவுப்பொருள் என்று கூறுபவர்கள் 3 வேளையும் அதை குடிக்க முடியுமா? - பெ.சண்முகம் கேள்வி

கள் விற்பனைக்கு அனுமதி வழங்க வேண்டும். அது உணவுப்பொருள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பெ. சண்முகம் கூறியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சொத்துவரி, குடிநீர் கட்டணம், மின் கட்டணம் மற்றும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் கலந்துகொண்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பெ. சண்முகம் கூறியதாவது:-

ஜி.எஸ்.டி. வரி காரணமாக விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை. விலைவாசியை குறைக்க சாதகமான வாய்ப்புகள் இருந்தபோதிலும் அதை மத்திய அரசு கவனத்தில் எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், கார்பரேட் கம்பெனிகளுக்கு மானியமும், ஊக்கத்தொகைகளையும் வழங்கி அவர்களின் கோடிக்கணக்கான கடனை தள்ளுபடி செய்கிறார்கள். விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய முடியாது என்று மறுக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மதுரை மேலூரில் கிரானைட் கொள்ளை நடந்தது குறித்து விசாரிக்க முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அவர் விரிவான அறிக்கையை ஐகோர்ட்டில் சமர்ப்பித்தார். ஆனால், விசாரணை அறிக்கை மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குற்றம்சாட்டப்பட்டவர்கள் சுதந்திரமாக வெளியில் நடமாடுகிறார்கள். விசாரணை அதிகாரி சகாயம் வெளியில் வரமுடியாமல் இருக்கிறார். அவருக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அளிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

இதேபோல, தி.மு.க. அளித்த வாக்குறுதிகளில் மீதம் உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென நான் குற்றச்சாட்டாக கூறவில்லை. மீதம் உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் மூலம் சட்டமன்றத்தேர்தலை தைரியமாக சந்திக்க அது உதவியாக இருக்கும் என்றே கூறினேன். கள் உணவு என்று சொல்பவர்கள் அதை 3 வேளையும் குடிக்க முடியுமா? கள்ளும் ஒருவகை மது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. கள் விற்பனைக்கு அனுமதி வழங்க வேண்டும். அது உணவுப்பொருள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com