திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

ஐம்பெரும் பூதங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.
திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
Published on

திருவண்ணாமலை,

ஐம்பெரும் பூதங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. இங்கு மலையே சிவனாக வணங்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை வணங்கி வருகின்றனர். கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகிறது.

ஆனி மாத பவுர்ணமி

இந்த நிலையில் ஆனி மாத பவுர்ணமியையொட்டி இன்று பகலில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் குறைந்தே காணப்பட்டது. பின்னர் மாலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. கிரிவலம் செல்வதற்காக தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் திருவண்ணாமலைக்கு வந்தனர். கிரிவலம் தொடங்கும் முன்பு பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் எதிரில் ஏராளமானோர் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

பக்தர்கள் சாமி தரிசனம்

மேலும் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். இதனால் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டனர். மேலும் கிரிவலப்பாதையில் பலர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் போன்றவை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள்

அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க அங்கு தீயணைப்புத் துறையினர் தீ தடுப்பு தண்ணீர் வாகனத்துடன் தயார் நிலையில் இருந்தனர். கோவிலில் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதுமட்டுமின்றி போலீசாரும் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் பக்தர்கள் செல்லும் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com