‘யூடியூப்’ பார்த்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: 3 பேர் கைது

இரும்பு கம்பி கொண்டு உடைக்க முயற்சி செய்ததும், போலீசார் வந்தவுடன் அவர்கள் தப்பி சென்றதும் தெரியவந்தது.
கைது
Published on: 

குடியாத்தம்,

குடியாத்தத்தில் 'யூடியூப்' பார்த்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொள்ளையடிக்க முயற்சி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் கொண்டசமுத்திரம் பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கியின் வெளியே ஏ.டி.எம். மையம் உள்ளது. சம்பவத்தன்று அதிகாலை குடியாத்தம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபால் அந்த பகுதியில் ரோந்து சென்றார். அப்போது ஏ.டி.எம். வாசலில் இருந்து 3 பேர் சப்-இன்ஸ்பெக்டரை கண்டவுடன் மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து வேகமாக சென்றனர்.

இதனால் சந்தேகம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபால் மற்றும் போலீசார் ஏ.டி.எம். மையத்துக்கு சென்று பார்த்தபோது அங்கு ரம்பம், இரும்பு கம்பிகள் கிடந்தன. மேலும் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் வங்கி அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் வங்கியில் இருந்த கண்காணிப்பு கேமராவை பார்த்தபோது, 3 பேரும் முககவசம் அணிந்து ஏ.டி.எம். மையத்துக்கு வந்து, கண்காணிப்பு கேமரா மீது 'ஸ்பிரே' அடித்துள்ளனர். தொடர்ந்து ரம்பம் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை அறுக்க முயற்சி செய்துள்ளனர். மேலும் இரும்பு கம்பி கொண்டு உடைக்க முயற்சி செய்ததும், போலீசார் வந்தவுடன் அவர்கள் தப்பி சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வேலூர் சரக டி.ஐ.ஜி. மகேஷ். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் ஆகியோர் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் சிவகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜி, ஏட்டுக்கள் தினகரன், பிரேம்குமார் உள்ளிட்ட போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு 3 பேரையும் தேடி வந்தனர்.

ஏ.டி.எம். எந்திரம்

இந்த நிலையில், குடியாத்தம் அருகே பெரும்பாடி கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் (வயது 20) மற்றும் அருகே உள்ள கிராமங்களைச் சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 2 பேர் இந்த சம்பவத் தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத் தினர். இதில், பிரசாந்தும், 2 சிறுவர்களும் நண்பர்கள். இவர்கள் எந்த வேலைக்கும் செல்லாமல் சுற்றி வந்துள்ளனர். பணத்தேவைக்காக 'யூடியூப்' மூலம் கொள்ளையடிப்பது எப்படி? என பார்த்துள்ளனர். இதைத்தொடர்ந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்கலாம் என்று அவர்கள் முடிவு செய்தனர். பின்னர் 3 பேரும் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்றபோது போலீசார் வந்ததால் தப்பி ஓடியது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாந்த் மற்றும் 2 சிறுவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'யூடியூப்' பார்த்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X