

சென்னை
தமிழகத்தின் 3 கடற்கரைகளுக்கு சர்வதேச நீலக்கொடி அங்கீகாரம் கிடைத்துள்ளது. கோவளம் கடற்கரை 6-வது முறையாக இதனை தக்கவைத்து சாதனை படைத்துள்ளது.
தமிழ்நாடு அரசு, கடலோர சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைத்தகு சுற்றுலா மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. டென்மார்க் நாட்டை சேர்ந்த சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை (Foundation for Environmental Education -FEE), கடலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளி கடற்கரை (Silver Beach), நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள காமேஸ்வரம் கடற்கரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரியமான் கடற்கரை ஆகிய 3 கடற்கரைகளுக்கு 2026-2027-ம் ஆண்டிற்கான மதிப்புமிக்க சர்வதேச நீலக்கொடி (Blue Flag) அங்கீகாரத்தினை முதன்முறையாக வழங்கியுள்ளது. மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கோவளம் கடற்கரை தனது நீலக்கொடி அங்கீகாரத்தை தொடர்ந்து ஆறாவது முறையாக புதுப்பித்து தக்கவைத்துள்ளது.
நீலக்கொடி அங்கீகாரம் என்பது உலகளவில் கடற்கரைகளுக்கு வழங்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தரச்சான்றாகும். கடற்கரைகளின் தூய்மை, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மேலாண்மை, குளிப்பதற்கான கடல் நீரின் தரம், சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பார்வையாளர்களுக்கான வசதிகள் உள்ளிட்ட 33 சர்வதேச தரநிலைகளின் அடிப்படையில் இவ்வங்கீகாரம் வழங்கப்படுகிறது. இத்தரநிலைகள் தொடர்ந்து பின்பற்றப்படுகின்றனவா? என்பதை தேசிய மற்றும் சர்வதேச மதிப்பீட்டுக்குழுக்கள் ஆய்வு செய்த பின்னரே இவ்வங்கீகாரம் வழங்கப்பட்டு, ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படுகிறது.
கோவளம் கடற்கரை 2021-ஆம் ஆண்டில் முதன்முறையாக நீலக்கொடி அங்கீகாரத்தை பெற்ற தமிழ்நாட்டின் முதல் கடற்கரையாக திகழ்கிறது. தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நிர்ணயிக்கப்பட்ட சர்வதேச தரநிலைகளை பூர்த்தி செய்து, 2026-ஆம் ஆண்டிலும் தனது நீலக்கொடி அங்கீகாரத்தை தக்கவைத்துள்ளது. கடந்த 2025-26-ஆம் ஆண்டில் மட்டும் கோவளம் கடற்கரைக்கு சுமார் 5.5 லட்சம் பார்வையாளர்கள் வருகை புரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அங்கீகாரங்களின் மூலம், தமிழ்நாட்டில் நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற கடற்கரைகளின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற கடற்கரைகளை கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடும் முன்னணி இடத்தை பெற்றுள்ளது.
தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் (TN-SHORE) கீழ் இந்நீலக்கொடி கடற்கரை மேம்பாட்டுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு மற்றும் வழிகாட்டும் துறையாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை (DoECC) செயல்பட்டு வருகிறது. சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப கடற்கரை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், கடலோர சூழலியலை பாதுகாத்தல், பார்வையாளர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்கு உகந்த சுற்றுலாவை ஊக்குவித்தல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.