

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே பாம்பன் தெற்குவாடி கடற்கரை பகுதியில் கியூ பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் பாம்பன் தெற்குவாடி கடற்கரையை நோக்கி வந்த பைபர் படகை போலீசார் சோதனையிட்டனர்.படகில் 4 பேர் இருந்தனர். அவர்கள் படகை ஓட்டி வந்த ராமேசுவரத்தை சேர்ந்த முத்துராஜா, இலங்கை கண்டி பகுதியை சேர்ந்த தர்ஷன், திரிகோணமலையை சேர்ந்த முகமது கான், மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த முகமது ஆசிக் என தெரியவந்தது. இலங்கையை சேர்ந்தவர்களை முத்துராஜா தனது பைபர் படகில் அழைத்து வந்துள்ளார். அவர்களிடம் கியூ பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன.
இலங்கையை சேர்ந்த தர்ஷன் கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி சுற்றுலா விசாவில் பெங்களூரு விமான நிலையம் வழியாக இந்தியாவுக்கு வந்து பின்னர் நாமக்கல் மாவட்டத்தில் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில், ராமேசுவரத்தை சேர்ந்த முத்துராஜா என்பவரை தொடர்பு கொண்ட தர்ஷன், இலங்கையில் இருந்து 2 பேரை படகு மூலம் தமிழகத்துக்கு அழைத்துவர வேண்டும் என்றும், இதற்காக ₹1.10 லட்சம் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.இதையடுத்து முத்துராஜா தனக்கு சொந்தமான பதிவு எண் இல்லாத பைபர் படகில் தர்ஷனை ஏற்றிக்கொண்டு தனுஷ்கோடி கடற்கரையில் இருந்து நேற்று முன்தினம் மாலை புறப்பட்டு சென்றார். இருவரும் படகில் சர்வதேச கடல் எல்லை பகுதியில் இரவு காத்திருந்தனர்.
அப்போது இலங்கையில் இருந்துவந்த படகில் இருந்த முகமது கான், முகமது ஆசிக் ஆகிய இருவரையும் பைபர் படகில் ஏற்றிக்கொண்டு பாம்பன் தெற்கு வாடி கடற்கரைக்கு அதிகாலை வந்து இறங்கியபோது 4 பேரும் பிடிபட்டனர்.கைதான முகமது கான், முகமது ஆஷிக் இருவரும் டெல்லியில் இருந்து போலி பாஸ்போர்ட், விசா மூலம் லண்டன் தப்பி செல்ல இருந்ததும் கண்டுபிடிக்கப்பட் டது. இதற்காக டெல்லியில் வசித்து வரும் இலங்கையை சேர்ந்த ரமேஷ் என்பவர் ₹1 கோடி கேட்டதாகவும், அதற்கு முன்பணமாக அவரது வங்கி கணக்கில் ₹20 லட்சம் அனுப்பியதாகவும் தெரிவித்து உள்ளனர்.பிடிபட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள கியூ பிரிவு போலீசார், கடத்தல் சம்பவத்திலும் அவர்கள் ஈடுபட்டுள்ளார்களா? என்பது குறித்தும் அவர்களிடம் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.