கணவருடன் செல்பி எடுத்த இளம்பெண்...திடீரென வந்து தாக்கிய 3 பேர் கைது

தகாத வார்த்தைகளால் பேசி இளம் பெண்ணை தாக்கிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.
கணவருடன் செல்பி எடுத்த இளம்பெண்...திடீரென வந்து தாக்கிய 3 பேர் கைது
Published on

ஆலந்தூர்,

வேளச்சேரி மேம்பாலத்தில் கணவருடன் 'செல்பி' எடுத்த இளம் பெண்ணை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கணவருடன் 'செல்பி'

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது பிறந்தநாளையொட்டி கணவர் மற்றும் நாத்தனாருடன் காரில் பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்றார். பின்னர் தேவாலயத்துக்கு சென்று வழிபட்டுவிட்டு நள்ளிரவில் காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். வேளச்சேரி டான்சி நகர் மேம்பாலத்தில் சென்றபோது, காரை ஓரமாக நிறுத்திவிட்டு கணவர் மற்றும் நாத்தனாருடன் சேர்ந்து செல்போனில் 'செல்பி' மற்றும் புகைப்படம் எடுத்து கொண்டிருந்தார்.

தாக்குதல்

அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் மேம்பாலத்தில் சென்றனர். அவர்களில் 3 பேர் மட்டும் மோட்டார் சைக்கிள்களில் இருந்து இறங்கி இளம்பெண்ணின் அருகே சென்றனர். பின்னர் அவரை பார்த்து எங்களை பார்த்து ஏன் ஆபாச சைகை செய்தாய்? என்று கேட்டு தகாத வார்த்தைகளால் பேசினர். அதற்கு அந்த பெண், தான் எந்த சைகையும் காட்டவில்லை என்று கூறினார். ஆனால் அவர்கள் மீண்டும் தகாத வார்த்தைகளால் பேசி இளம் பெண்ணை தாக்கிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். இதில் இளம்பெண்ணின் வலது கை நடுவிரலில் சிறிய காயம் ஏற்பட்டது.

3 பேர் கைது

அவர் தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்ற பிறகு வேளச்சேரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து வேளச்சேரி காமராஜபுரம் காந்தி தெருவைச் சேர்ந்த தீபக் ராஜா (19), எம்.ஜி.ஆர். நகர் 2-வது தெருவைச் சேர்ந்த விக்னேஷ் (19) மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். விசாரணையில், தீபக் ராஜா, தண்ணீர் கேன் வினியோகம் செய்யும் வேலை செய்து வருவதும், மற்ற இருவரும் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யும் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com