மேலும் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

மரக்காணம் விஷ சாராய கொலை வழக்கில் கைதான மேலும் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
மேலும் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Published on

விழுப்புரம்

விஷ சாராய கொலை வழக்கு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த மே மாதம் 13-ந் தேதியன்று மெத்தனால் கலந்த விஷசாராயத்தை குடித்தவர்களில் எக்கியார்குப்பத்தை சேர்ந்த 14 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக சாராய வியாபாரிகள், கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள் என 12 பேர் மீது மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 11 பேரை கைது செய்தனர். அதன் பின்னர் இவ்வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டதன்பேரில் கைதான 11 பேர் மீதும் மரக்காணம் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கைதான 11 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து மீண்டும் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

இந்நிலையில் இச்சம்பவத்தில் கைதான சாராய வியாபாரிகளான அமரன், ஆறுமுகம், முத்து, ரவி, மண்ணாங்கட்டி ஆகிய 5 பேரை கடந்த சில நாட்களுக்கு முன்பு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக சாராய வியாபாரிகளுக்கு மெத்தனால் சப்ளை செய்த புதுச்சேரி ராஜா என்கிற பர்கத்துல்லா, தட்டாஞ்சாவடி ஏழுமலை, சென்னை திருவேற்காட்டை சேர்ந்த கெமிக்கல் ஆலை உரிமையாளர் இளையநம்பி ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் பரிந்துரை செய்தனர். அதன்பேரில் அவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யும்படி சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவிட்டார்.இதையடுத்து ராஜா என்கிற பர்கத்துல்லா, ஏழுமலை, இளையநம்பி ஆகிய 3 பேரையும் நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவர்கள் 3 பேருக்கும் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com