மதுரவாயலில் போதை மாத்திரைகள் விற்ற பெண் ரவுடி உட்பட 3 பேர் கைது

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மொத்தம் 1,020 போதை மாத்திரைகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.
3 பேர் கைது.
ரவுடி கோகுல்ராஜ், நாராயணமூர்த்தி மற்றும் தாரணி
Published on

சென்னை,

சென்னை மதுரவாயல் பகுதியில் சுடுகாட்டில் வைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்த பெண் ரவுடி உட்பட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

போலீசார் சோதனை

சென்னை மதுரவாயல் ஓம் சக்தி நகர் பகுதியில் உள்ள சுடுகாட்டில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினர். இதையடுத்து, அவர்களை போலீசார் சோதனை செய்தபோது அவர்களிடம் போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ரவுடிகள் கைது

இதனைத் தொடர்ந்து, மதுரவாயலைச் சேர்ந்த ரவுடி கோகுல்ராஜ், நாராயணமூர்த்தி மற்றும் பெண் ரவுடி தாரணி ஆகிய மூன்று பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து மொத்தம் 1,020 போதை மாத்திரைகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மாத்திரைகளை அவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து விற்பனை செய்ய முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பல்வேறு வழக்குகள் நிலுவை

கைதானவர்களில் பெண் ரவுடியான தாரணி மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் மீது கொலை முயற்சி, அடிதடி மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகள் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள மதுரவாயல் போலீசார், அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com