தொழிலாளியை டைல்ஸ் கல்லால் அடித்து கொன்ற மனைவி உள்பட 3 பேர் கைது

தூத்துக்குடியில் மரக்கடை தொழிலாளியை மர்ம நபர்கள் டைல்ஸ் கற்களால் கொடூரமாகத் தாக்கி கொலை செய்தனர்.
தொழிலாளி கொலை, 3 பேர் கைது.
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே மரக்கடைத் தொழிலாளி கொடூரமான முறையில் டைல்ஸ் கற்களால் தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மரக்கடை தொழிலாளி

தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்த ஆரோக்கியராஜின் மகன் ஞானப்பிரகாசம் (வயது 47). இவர் மாப்பிள்ளையூரணியில் உள்ள ஒரு மரக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவருடன் அத்திமரப்பட்டியைச் சேர்ந்த கிளின்டன் என்பவரும் பணியாற்றி வந்தார்.

டைல்ஸ் கல்லால் அடித்து கொலை

கருத்து வேறுபாடு காரணமாக ஞானப்பிரகாசத்தைப் பிரிந்த அவரது மனைவி பாரதி, தனது 2 குழந்தைகளுடன் கூட்டாம்புளியில் தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று கூட்டாம்புளி வீட்டிற்குச் சென்ற ஞானப்பிரகாசம், மனைவி பாரதியிடம் தகராறு செய்துவிட்டுத் தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார். இந்த நிலையில் ஞானப்பிரகாசத்தை மர்ம நபர்கள் டைல்ஸ் கற்களால் கொடூரமாகத் தாக்கி கொலை செய்தனர்.

அதிர்ச்சி தகவல்

இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய புதுக்கோட்டை போலீசாருக்கு பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தன. ஞானப்பிரகாசத்தின் மனைவியான பாரதிக்கும், மரக்கடையில் ஞானப்பிரகாசத்துடன் வேலை பார்த்து வந்த கிளின்டனுக்கும் இடையே நெருங்கிய பழக்கம் இருந்துள்ளது.

மகள் திருமணத்திற்கு எதிர்ப்பு

இதனால் கிளின்டனுக்கு தனது மகளை திருமணம் செய்து வைக்க பாரதி முடிவு செய்துள்ளார். ஆனால் இதற்கு ஞானப்பிரகாசம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சம்பவத்தன்று இரவிலும் இதுதொடர்பாக ஞானப்பிரகாசத்திற்கும், பாரதிக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டுள்ளது.

மனைவி உள்பட 3 பேர் கைது

பாரதியின் தூண்டுதலின் பேரில், கிளின்டன் தனது நண்பரான வினோத் என்பவருடன் இணைந்து ஞானப்பிரகாசத்தை டைல்ஸ் கல்லால் அடித்து, தலையில் தாக்கி கொலை செய்தது உறுதியானது. இதனைத் தொடர்ந்து, கொலைக்குக் காரணமான மனைவி பாரதி, மரக்கடை ஊழியர் கிளின்டன் மற்றும் அவரது நண்பர் வினோத் ஆகிய 3 பேரையும் புதுக்கோட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com