இணையதள கல்விக் கழகம் மூலம் இணைய வழியில் கணினி தமிழ் பாடத் திட்டம்

இணையதள கல்விக் கழகம் மூலம் இணைய வழியில் கணினித் தமிழ் பாடம் கற்றுத் தரப்படும் என்று அமைச்சர் மணிகண்டன் அறிவித்துள்ளார்.
இணையதள கல்விக் கழகம் மூலம் இணைய வழியில் கணினி தமிழ் பாடத் திட்டம்
Published on

சென்னை,

தமிழக சட்டசபையில் தகவல் தொழில்நுட்பவியல் துறையின் மானியக் கோரிக்கை மீது நேற்று எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அதற்கு அந்தத் துறையின் அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் பதிலளித்துப் பேசினார். பின்னர் சட்டசபையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-

ராமநாதபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்பவியல் பூங்காக்களை உருவாக்க சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நிதித்துறையில் போட்டி, புதுமை, உற்பத்தித் திறனை உருவாக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் சென்னையில் நிதி தொழில்நுட்ப சிறப்பு மையம் அமைக்கப்படும்.

பல்வேறு துறைகளின் திட்டங்களின் காட்சித் தோற்றத்திற்கு முன்முயற்சியாக முதலீட்டுத் திட்டமாக, முதல்அமைச்சர் முகப்பு பக்கம் (சி.எம். டாஷ் போர்டு) உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் அனைத்து முக்கிய துறைகளிலும் செயல் திறனை முதல்-அமைச்சர், அமைச்சர்கள் திறம்பட கண்காணிக்க இயலும்.

எல்காட் இமார்கெட் மூலம் அரசுத் துறைகளுக்கு ஆன்லைன் வழியாக அனைத்து தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த வன்பொருள், மென்பொருள் சேவை வழங்கப்படும்.

தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மூலம், தொழில்நுட்ப கருத்துக்கள வசதி அமைக்கப்படும். இணையட் வழியில் அனைத்து இசேவைகளையும் அளிப்பதற்கு, கூடுதல் ஆன்லைன் சேவையை வழங்க வழிவகை செய்யப்படும்.

தமிழ் மொழியை கணினிக்கு கொண்டு செல்லும் கட்டாயம் உள்ளது. எனவே, கணினித் தமிழ் பாடத்திட்டத்தை பட்டயப் படிப்பாக இணைய வழியில் இணையதள கல்விக் கழகம் பயிற்றுவிக்க உள்ளது.

அரசுத் துறைகளுக்கு தேவைப்படும் பட்சத்தில், தகவல் தொழில்நுட்ப பணியாளர் தொகுப்பில் இருந்து பணியாளர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள். அரசுத் துறைகளின் இணையதளங்கள் உரிய கால இடைவெளியில் பாதுகாப்பு தணிக்கை செய்யப்படும்.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சந்தாதாரர்கள், கூடுதலாக ஓ.டி.டி. (ஓவர் த டாப்) சேவை மூலம், அவர்கள் விரும்பும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளையும் உலகின் எந்த பாகத்தில் இருந்து, கிளவுட் கம்ப்யூட்டிங், செல்போன், டாப்லெட், கம்ப்யூட்டர், லேப்-டாப் போன்ற பல்திரை உபகரணங்கள் மூலம் கண்டுகளிக்கும் வசதி வழங்கப்படும். இதன் தொடக்கத்தில் 50 முதல் 100 தொலைக்காட்சி சேனல்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர் அறிவிப்புகளை வெளியிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com