தமிழகத்தில் 3 அலைகளாக வீசிய கொரோனாவின் பிடியில் சிக்கி முதியோர் அதிகம் உயிரிழப்பு

தமிழகத்தில் 3 அலைகளாக வீசிய கொரோனாவின் பிடியில் சிக்கிய முதியோர் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது.
தமிழகத்தில் 3 அலைகளாக வீசிய கொரோனாவின் பிடியில் சிக்கி முதியோர் அதிகம் உயிரிழப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் முதன்முதலாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 7-ந்தேதி ஓமனில் இருந்து சென்னை வந்த காஞ்சீபுரத்தை சேர்ந்த 45 வயது நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனா பரவலின் வேகம் தினசரி அதிகரித்து நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 6 ஆயிரத்து 993 பேர் வரை கொரோனா பாதிப்புக்கு ஆளானார்கள். இது முதல் அலையின் போது தமிழகத்தின் அதிகபட்ச பாதிப்பாகும். மேலும் முதல் அலையில் அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 127 பேர் வரை உயிரிழந்தனர்.

இதையடுத்து குறைந்து வந்த தொற்று எண்ணிக்கை மீண்டும் உயர்ந்து 2-வது அலையாக உருவெடுத்தது. அந்தவகையில் 2-வது அலையின் அதிகபட்ச பாதிப்பாக நாள் ஒன்றுக்கு 36 ஆயிரத்து 184 பேர் வரை பாதிக்கப்பட்டனர். மேலும் உயிரிழப்பும் அதிகபட்சமாக 493 பேர் வரை இருந்தது. தொடர்ந்து 3-வது அலையில், அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 30 ஆயிரத்து 744 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. ஆனால் உயிரிழப்பு அதிகபட்சமாக 53 என்ற அளவில் கடந்த 2 அலைகளை காட்டிலும் குறைவாகவே காணப்பட்டது.

61 முதல் 70 வயதுக்கு உட்பட்டோர்...

தமிழகத்தில் கொரோனாவுக்கு நேற்று முன்தினம் நிலவரப்படி இதுவரை 38 ஆயிரத்து 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்ச உயிரிழப்பு சென்னையில்தான் நிகழ்ந்துள்ளது. அதாவது, இதுவரை 9 ஆயிரத்து 65 கொரோனா உயிரிழப்புகள் சென்னையில் பதிவாகி உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டில் 2,649 உயிரிழப்புகளும், கோவையில் 2,617 உயிரிழப்புகளும், திருவள்ளூரில் 1,940 உயிரிழப்புகளும், சேலத்தில் 1,764 உயிரிழப்புகளும் என 12 மாவட்டங்களில் ஆயிரத்துக்கு மேல் உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன.

குறிப்பாக இணை நோய்க்கு சிகிச்சைக்கு பெற்று வந்தவர்களே இந்த கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களே அதிகம். உயிரிழந்தவர்களில் அதிகபட்சமாக 61 முதல் 70 வயதுக்கு உட்பட்ட முதியோர்கள் 11 ஆயிரத்து 78 பேர் அடங்குவர். 51 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 8 ஆயிரத்து 719 பேரும், 71 முதல் 80 வயதுக்கு உட்பட்டவர்கள் 7 ஆயிரத்து 921 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

குழந்தைகள் உயிரிழப்பு குறைவு

கொரோனாவுக்கு குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தாலும், உயிரிழப்பு என்பது குறைவாகவே இருந்தது. அந்தவகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 10 வயதுக்கு உட்பட்ட 94 ஆயிரத்து 975 குழந்தைகளில், 24 குழந்தைகள் மட்டுமே உயிரிழந்துள்ளனர். மேலும், 11 முதல் 20 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 2 லட்சத்து 67 ஆயிரத்து 557 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 53 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். மேலும், 100 வயதுக்கு உட்பட்ட 7 முதியோர்களும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்புகளில் 90 சதவீதத்துக்கு மேல் இணை நோய் உள்ளவர்களும், தடுப்பூசிகளை முறையாக செலுத்தி கொள்ளாதவர்களுமே ஆவர் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது கொரோனா பாதிப்பும் குறைந்து, உயிரிழப்புகளும் பூஜ்ஜியம் என்ற நிலைக்கு தமிழகத்தில் வந்து விட்டது. ஆனாலும், அண்டை மாநிலங்களில் தொடர்ந்து கொரோனாவின் வீரியம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் முககவசம் அணிவது, தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வது என அரசின் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com