சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் கூகுள் பே மூலம் டிக்கெட் விநியோகம்: சுற்றுலா பயணிகள் அவதி

கிண்டி சிறுவர் பூங்காவில் கூகுள் பே மூலம் மட்டுமே டிக்கெட் வழங்கப்படுகிறது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை கிண்டியில் நாட்டிலேயே 8-வது சிறிய தேசிய பூங்கா உள்ளது. இங்கு 350-க்கும் மேற்பட்ட தாவர வகைகள் உள்ளன. மேலும், 14 பாலூட்டி சிற்றினங்களும், 100-க்கும் மேற்பட்ட பறவை இனங்களும் இருக்கின்றன. வடகிழக்கு பகுதியில் சிறுவர்கள் விளையாடவும், கண்டு ரசிக்கவும் ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கிண்டி சிறுவர் பூங்கா கடந்த 2024-ம் ஆண்டு ரூ.30 கோடி செலவில் புனரமைக்கப்பட்டது. அதன்பிறகு பார்வையாளர்கள் கட்டணமும் உயர்ந்தது. பெரியவர்களுக்கு ரூ.60, சிறியவர்களுக்கு (5 முதல் 12 வயது) ரூ.10 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, வாட்ஸ்-அப் மூலம் டிக்கெட் எடுத்துக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், தற்போது கூகுள் பே மூலம் மட்டுமே டிக்கெட் வழங்கப்படுகிறது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பணத்தை நேரடியாக கொடுத்து டிக்கெட் பெறும் முறை நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், குடும்பத்துடன் வரும் சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.






