

கோயம்புத்தூர்,
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப்புக்கு கோவை மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும் அம்புலி தங்கும் விடுதி பகுதியில் புலி ஒன்று சாலையை கடந்து சென்றது. இதை அங்கு தங்கியிருந்த சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினரும் தங்கும் விடுதி பகுதியில் புலி நடமாட்டம் இருப்பது குறித்து ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், அம்புலி தங்கும் விடுதி அருகில் புலி நடமாட்டம் உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதியை விட்டு மாலை 5 மணிக்கு பிறகு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். இரவு நேரங்களில் வெளியே வரக்கூடாது. வனத்துறையினர் கூறும் அறிவுரைகளை முறையாக பின்பற்ற வேண்டும். விதிமுறைகளை மீறும் சுற்றுலா பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.