நீலகிரி: கால்நடைகளை கொன்று அட்டகாசம் செய்த புலி, கூண்டில் சிக்கியது

பிடிக்கப்பட்ட புலியை முதுமலை வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டனர்.
நீலகிரி: கால்நடைகளை கொன்று அட்டகாசம் செய்த புலி, கூண்டில் சிக்கியது
Published on

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவர்சோலை பேரூராட்சியில் உள்ள தனியார் எஸ்டேட்டில் புலி ஒன்று பதுங்கி இருந்து கடந்த 4 மாதங்களாக 30-க்கும் மேற்பட்ட கால்நடைகளை அடித்து கொன்று அட்டகாசம் செய்தது. அந்த புலியை பிடிக்கக்கோரி விவசாயிகள், பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து புலியை பிடிக்க முதன்மை தலைமை வன பாதுகாவலர் ராகேஷ் குமார் டோக்ரா உத்தரவின்பேரில் கூடலூர் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தலைமையிலான வனத்துறையினர் 4 இடங்களில் இரும்பு கூண்டுகளை வைத்தனர். மேலும் 40 இடங்களில் கேமராக்களை பொருத்தி கண்காணித்தனர். ஆனால் அந்த புலி கூண்டில் சிக்காமல் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்தது.

இதற்கிடையில் கேரள மாநிலம் நிலம்பூர் வனத்துறையினரிடம் இருந்து ராட்சத இரும்பு கூண்டை கூடலூர் வனத்துறையினர் வாங்கி வந்து கொட்டாய் மட்டம் பகுதியில் வைத்தனர். அதிலும் புலி சிக்கவில்லை. சமீபத்தில் தேவன்-2 பகுதியில் மணி என்பவரது பசுமாட்டை புலி அடித்து கொன்றது.

அந்த பசுமாட்டின் உடலை கொட்டாய் மட்டம் பகுதியில் வைக்கப்பட்ட ராட்சத இரும்பு கூண்டில் வனத்துறையினர் வைத்தனர். அதில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு 3 வயது ஆண் புலி சிக்கி இருந்தது. அது மிகுந்த ஆக்ரோஷத்துடன் காணப்பட்டது. அங்கு பொதுமக்களும் திரண்டனர். இதனால் கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு வசந்தகுமார் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து ராட்சத கூண்டில் இருந்து சிறிய கூண்டுக்கு புலியை மாற்றப்பட்டது. பின்னர் லாரியில் ஏற்றி கொண்டு சென்று முதுமலை வனப்பகுதியில் அந்த புலியை விடுவித்தனர். இதனால் விவசாயிகள், பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

கூடலூர் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறும்போது, கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்ட 30 அடி நீளம், 10 அடி உயரம் கொண்ட ராட்சத இரும்பு கூண்டு மூலம் தமிழ்நாட்டில் முதன் முறையாக புலி பிடிக்கப்பட்டுள்ளது. எந்தவித காயங்களும் இல்லாமல் புலி நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது என்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com