“முதல்-அமைச்சர் வேட்பாளர் குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பு” - அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேட்டி

“அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பதை கட்சி தலைமை உரிய நேரத்தில் அறிவிக்கும்” என கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
“முதல்-அமைச்சர் வேட்பாளர் குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பு” - அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேட்டி
Published on

சென்னை,

சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதம் இருக்கும் நிலையில், கொரோனா வீரியத்தையும் தாண்டி கட்சிகள் இடையே தேர்தல் பற்றிய கருத்து மோதல்கள் வலுத்து வருகின்றன. அ.தி.மு.க.வில் கட்சிக்குள்ளேயே, அமைச்சர்கள் மத்தியில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பது குறித்து வெவ்வேறு கருத்துகள் நிலவிவருகிறது.

அதாவது, தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றால், எம்.எல்.ஏ.க்கள் ஒன்றுகூடியே முதல்-அமைச்சரை தேர்வு செய்வோம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி தான் என்றும் முதல்-அமைச்சர். அவரை முன்னிறுத்தியே களம் காண்போம் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார். அமைச்சர் உதயகுமாரும் இதே கருத்தை கூறியிருந்தார்.

அமைச்சர்கள் இடையே நடந்த இந்த கருத்து மோதல் அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

இந்தநிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று திடீரென நிர்வாகிகளுக்கு இடையேயான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், அமைப்பு செயலாளர் மனோஜ்பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் சட்டசபை தேர்தல் களப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாயின.

கூட்டம் முடிந்து வெளியே வந்த அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. வளர்ச்சிக்காக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக தேர்தல் கமிஷன் சில கருத்துகளை கேட்டிருக்கிறது. அதற்கு ஏற்றவாறு அ.தி.மு.க. சொல்லவேண்டிய கருத்துகளை தயார் செய்வதற்காக இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறந்த முறையில் ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார். அவருக்கு துணையாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்கள் செயல்பட்டு வருகிறார்கள். கொரோனா சூழலிலும் இந்திய துணைக்கண்டத்தில் ஒரு முன்மாதிரி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பதை உரிய காலத்தில், உரிய நேரத்தில் கட்சி தலைமை அறிவிக்கும்.

பா.ஜ.க. தலைமையில் தான் கூட்டணி என்று, அக்கட்சியை சேர்ந்த வி.பி.துரைசாமி பேசியுள்ளார். நேற்று வரை ஒரு கட்சியிலும், அதற்கு முன்பாக இன்னொரு கட்சியிலும் இருந்தவர் இப்போது சேர்ந்துள்ள கட்சியில் ஏதாவது ஆதாயம் கிடைக்கவேண்டும் என்று அப்படி சொல்லியிருக்கிறார். தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் ஒரு பேட்டியில் கூட, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மேற்கண்டவாறு அவர் பதில் அளித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com