

திண்டிவனம்,
சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
திண்டிவனம் சட்டமன்ற தொகுதி, மரக்காணம் ஊராட்சி ஒன்றியம் - அன்னம்புத்தூர் ஊராட்சியில் இன்று மக்கள் குறைகேட்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் சார் ஆட்சியர், உள்ளாட்சி தலைவர்கள், துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நூற்றுக்கணக்கான பொது மக்கள் திரளாக பங்கேற்று, தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர். அவை துறைவாரியாக பிரிக்கப்பட்டு அதிகாரிகளிடம் சேர்க்கப்பட்டது.
'தேர்தல் வாக்குறுதிப்படி, இதுவரை செயல்படாமல் இருந்த சட்டமன்ற அலுவலகத்தை திறந்து, அங்கு மக்கள் தங்கள் குறைகளை முறையிடும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் ஓட்டு கேட்டு நேரில் தான் வந்தோம், இப்போது உங்கள் குறைகளை கேட்கவும் நேரில் தான் வந்துள்ளோம். அனைத்து மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.