

ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் வடக்கு கடற்கரைப் பகுதியில் இன்று, தூண்டில் வளைவு கட்டுமானப் பணிக்காக பாறாங்கற்களை ஏற்றி வந்த டிப்பர் லாரி ஒன்று நிலைதடுமாறி கடலில் தலைகுப்புறக் கவிழ்ந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் வடக்கு கடல் பகுதியில் நாட்டுப்படகு மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான தூண்டில் வளைவு அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிக்காகப் பெரிய அளவிலான பாறாங்கற்களை ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரிகள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன.
அப்பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, லாரி சென்று கொண்டிருந்த பாதை முழுவதும் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) அந்த வழியாக பாறாங்கற்களை ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி ஒன்று சென்றுகொண்டிர்ருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரியின் டயர் வழுக்கி நிலைதடுமாறியது.
இதனைத் தொடர்ந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த டிப்பர் லாரி, பாறாங்கற்களுடன் கடற்கரையோரம் இருந்த சரிவில் நழுவி, கடலுக்குள் தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடந்தவுடன் அருகில் இருந்த தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் விரைந்து செயல்பட்டு ஓட்டுநரை மீட்டனர். இந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கடலில் கவிழ்ந்த லாரியை ராட்சத கிரேன் மூலம் மீட்பதற்கான நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். கனமழையிலும் பணிகள் நடைபெறும் போது கூடுதல் பாதுகாப்பு வழிமுறைகளைக் கையாள வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.