

திருச்செந்தூர்,
முருகனின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக, விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.
அதேவேளை, திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பல மணிநேரம் காலதாமதம் ஆகும் சூழ்நிலை தொடர்ந்து நிலவி வருகிறது. மேலும், கோவிலில் பணியாற்றும் ஊழியர்கள், அர்ச்சகர்கள் பணம் வாங்கிக்கொண்டு கோவிலின் சண்முக விலாச மண்டப இருப்பு கேட் வழியாக பலரை அனுமதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இது தொடர்பாக சமூகவலைதளங்களில் அவ்வப்போது வீடியோக்களும் வலம் வந்த வண்ணம் உள்ளன. இதனால், திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசன நடைமுறையில் நிலவும் பிரச்சினைகளை உடனடியாக சரிசெய்ய வேண்டுமென தமிழக அரசுக்கும், கோவில் நிர்வாகத்திற்கும் பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதையாத்திரையாக வரும் பக்தர்கள் செல்லக்கூடிய வர்கள் சண்முக விலாச மண்டப இரும்பு கேட் வழியாக கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், இன்று சண்முக விலாச மண்டப இரும்பு கேட் பாதை வழியாக செல்ல இன்று காலை முதல் பாதையாத்திரையாக வந்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், கோவில் நிர்வாக ஊழியர்கள், அர்ச்சகர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு வேறு சிலரை அந்த பாதை வழியாக செல்ல அனுமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பலமணி நேரம் காத்திருந்த பக்தர்கள் ஆவேசமடைந்தனர். உடனடியாக, சண்முக விலாச மண்டப இரும்பு கேட் முன் திரண்ட பக்தர்கள் இரும்பு கேட்டை தள்ளிவிட்டு உள்ளே நுழைந்தனர். இந்த சம்பவத்தால் திருச்செந்தூர் கோவிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.