திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம்: சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 6, 7 ஆகிய 2 நாட்களில் சுமார் 8 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 7.7.2025 அன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 6.7.2025 மாலை முதல் 7.7.2025 இரவு வரை சுமார் 8 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதில் சுமார் 3 லட்சம் பக்தர்கள் கடற்கரை மற்றும் கோயில் வளாகத்திலிருந்து கும்பாபிஷேகத்தை நேரில் கண்டு தரிசித்தனர். மேலும் 2 லட்சம் பேர் சுற்றுப்புற பகுதிகளில் இடம் அளிக்கப்பட்டு தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டது. இந்த கும்பாபிஷேகத்தை சிறப்பாகவும் பாதுகாப்பாக மற்றும் அமைதியாகவும் நடத்தியதற்காக சுமார் 6,000 காவல் துறையினரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த கும்பாபிஷேகம் நிகழ்வை சிறப்பாக நடத்துவதில் ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து பக்தர்கள், பொதுமக்கள், அரசு அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தினருக்கும் தமிழ்நாடு காவல்துறை தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.
இந்த கும்பாபிஷேக விழாவில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் நேற்று தூத்துக்குடி காவல்துறை ஏ.டி.எஸ்.பி.க்கள் ஆறுமுகம், தீபு, தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ்.பி. மதன், டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போக்குவரத்து பிரிவு போலீசார், தனிப்பிரிவு போலீசார், தொழில்நுட்ப பிரிவு போலீசார் ஆகியோரை வாழ்த்தி பாராட்டினார்.






