

சென்னை,
5 மாநில தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் ராகுல்காந்தி ஒரு வாரம் தங்கி சாலையோர பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக சு.திருநாவுக்கரசர் கூறினார்.
கண்டன ஆர்ப்பாட்டம்
ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீதான போலீசாரின் அடக்குமுறையை கண்டித்தும், பிரதமர் மோடியின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்தும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில், சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. பீட்டர் அல்போன்ஸ், எம்.எல்.ஏ.க்கள் விஜயதரணி, பிரின்ஸ், மாவட்ட தலைவர்கள் ராயபுரம் மனோ, கராத்தே தியாகராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் சு.திருநாவுக்கரசர் பேசியதாவது:
ராகுல்காந்தி ஒரு வாரம் பிரசாரம்
ராகுல்காந்தி தமிழகத்தின் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறார். டெல்லியில், சுமார் 2 மணி நேரம் என்னிடம் பேசினார். காரணம் அவர் தமிழ்நாட்டை மிகவும் நேசிக்கிறார்.
தமிழகத்தில் காங்கிரஸ் வேகமாக வளர வேண்டும், பலமாக விளங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். 5 மாநில தேர்தலுக்கு பிறகு, தமிழகம் வரும் ராகுல் காந்தி ஒரு வாரம் தங்கி இருந்து சாலையோர பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக உறுதிஅளித்துள்ளார்.
நீதி விசாரணை வேண்டும்
ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய தடியடியில் சிலர் பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்த போராட்டத்தில் இறந்தவர்கள் எத்தனை பேர் என்பதை தெரிவிக்க வேண்டும். நாட்டு மக்களுக்கு உண்மையை தெரிவிக்க சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையில் நீதி விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
காந்திய வழி போராட்டம்
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது:
ஜல்லிக்கட்டுக்காக மாணவர்களும், இளைஞர்களும், பெண்களும் காந்திய வழியில் போராட்டம் நடத்தினார்கள்.
அவர்களை காப்பாற்ற வேண்டியது அரசின் பொறுப்பு. அதை விட்டு மக்களை வதைத்தால் மக்கள் பொறுக்க மாட்டார்கள். திரும்ப திரும்ப இதுபோன்ற நிலை வருமானால், மக்கள் கடற்கரையில் கூடமாட்டார்கள். கோட்டைக்குள்ளும், அமைச்சர்களின் வீடுகளுக்குள்ளும் புகுந்துவிடுவார்கள். வெள்ளைக்காரனையே வெறும் கையால் விரட்டியவர்கள் தான் நம் மக்கள்.
இனி மக்களுக்கு எந்த பிரச்சினை வந்தாலும் தெருவிலே வந்து நிற்கும் முதல் கட்சி காங்கிரசாகத்தான் இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி, மாவட்ட தலைவர்கள் ரங்கபாஷ்யம், வி.ஆர்.சிவராமன், மகிளா காங்கிரஸ் தேசிய செயலாளர் ஹசீனா சையத், எஸ்.சி. பிரிவு மாநில அமைப்பாளர் தமிழ்செல்வன், ஆலந்தூர் மண்டல காங்கிரஸ் தலைவர் நாஞ்சில் பிரசாத், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் சூளை ராஜேந்திரன் மற்றும் எம்.எஸ்.காமராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.