தொகுதி பங்கீடு குறித்து பேச விரைவில் காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு திருநாவுக்கரசர் பேட்டி

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக தேர்தல் பணிக்குழு விரைவில் அமைக்கப்படும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தொகுதி பங்கீடு குறித்து பேச விரைவில் காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு திருநாவுக்கரசர் பேட்டி
Published on

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஏழை மக்களுக்காக வரலாற்று சிறப்புமிக்க, அபூர்வமான, புரட்சிகரமான வறுமை ஒழிப்பு திட்டத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். ஏழைகள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதுதான் இதன் நோக்கம். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். இதையடுத்து ராகுல் காந்தி பிரதமர் ஆன உடன் இந்த திட்டத்துக்குத்தான் முதலில் கையெழுத்து போடுவார்.

இந்த திட்டத்தின் கீழ் ஏழைகளின் வங்கி கணக்கில் எவ்வளவு செலுத்தப்படும்? என்பது குறித்த விவரங்கள், விரைவில் வெளியாக உள்ள காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும். ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை காங்கிரஸ் கட்சி கொண்டு வந்தது என்பதால், அதற்கு பா.ஜ.க. அரசு நிதி ஒதுக்கவில்லை. நரேந்திர மோடி அரசு ஏழைகளை கசக்கி பிழிந்து, கோடீஸ்வரர்களுக்கு உதவுகிறது.

தேர்தல் பணிக்குழு

மோடி அலை ஓய்ந்து, தற்போது ராகுல் அலை வீசுகிறது. தென் மாநிலங்களில் உள்ள 132 இடங்களில் பா.ஜ.க.வுக்கு எதுவும் கிடைக்காது. தமிழகத்தை பொறுத்தவரையில் பா.ஜ.க. பரிதாப நிலையில் இருக்கிறது. மோடி கூட்டணி கதவை திறந்து வைத்திருக்கிறார். ஆனால் அந்த படியை தாண்டி செல்வதற்கு கூட யாரும் கிடையாது. போராட்டத்தில் உள்ள ஆசிரியர்களை பணி இடைநீக்கம் செய்யும் தமிழக அரசின் நடவடிக்கை சர்வாதிகார போக்கை காட்டுகிறது.

ஜெயலலிதா மரண விவகாரத்தில் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையை தீவிரப்படுத்தி, அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனையை வரவேற்கிறேன். இதனை முதலில் அறிவித்தது காங்கிரஸ் கட்சி தான்.

நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக தேர்தல் பணிக்குழு விரைவில் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சஞ்சய் தத், தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளர் சிரஞ்சீவி உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com