234 தொகுதிகளுக்கும் விரைவில் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் நியமனம் திருநாவுக்கரசர் பேட்டி

பாராளுமன்ற தேர்தலையொட்டி 234 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்று திருநாவுக்கரசர் கூறினார்.
234 தொகுதிகளுக்கும் விரைவில் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் நியமனம் திருநாவுக்கரசர் பேட்டி
Published on

சென்னை,

தமிழக காங்கிரஸ் தெற்கு மண்டல மாவட்ட தலைவர்கள், பொறுப்பாளர்கள், பிரிவுகள் மற்றும் துறை நிர்வாகிகள் கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். கட்சியின் தமிழக பொறுப்பாளர் சஞ்சய் தத், முன்னாள் தலைவர் குமரி அனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் ஆ.கோபண்ணா, இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் ஆரூண், சென்னை மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், எம்.எஸ்.திரவியம் மற்றும் மதுரை, தேனி, தூத்துக்குடி, நெல்லை, கோவை, கன்னியாகுமரி, திருச்சி உள்பட 36 மாவட்டங்களை (கட்சி அளவிலான) சேர்ந்த தலைவர்கள், பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தை தொடர்ந்து திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடைபெற அதிக வாய்ப்புள்ளது. எனவே அதற்கான களப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஓரிரு நாளில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

ஆட்சியில் அமர்ந்தபோது இருந்த நரேந்திர மோடியின் செல்வாக்கு தற்போது சரிந்து வருகிறது. மோடி அலை பாராளுமன்ற தேர்தலுடன் ஓயும். பா.ஜ.க.வுக்கு எதிரான ஒருமித்த கருத்துடைய அரசியல் தலைவர்களை ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு சந்தித்து வருவது பாராட்டத்தக்கது. காங்கிரசுடன் கலந்துபேசிய பிறகே பிராந்திய கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை சந்திரபாபு நாயுடு மேற்கொண்டு வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com