

சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கண்ட கனவை நிறைவேற்றும் வகையில் மக்களுக்கு அதிகாரம் வழங்கி, மக்கள் பங்கேற்கும் உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 73 மற்றும் 74-வது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இத்திருத்தங்களின் அடிப்படையில் தமிழக அரசால் 1994-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஊராட்சிகள் சட்டம் அமலுக்கு வந்தது. இதன் மூலம் 1996, 2001, 2006, 2011 என 4 உள்ளாட்சித் தேர்தல்கள் இதுவரை நடைபெற்றுள்ளன.
ஆனால் தற்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கு எப்போது தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்யாமல் நீதிமன்றம் முடிவு செய்கிற நிலை ஏற்பட்டுள்ளது.
கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
தமிழகத்தில் உள்ள பஞ்சாயத்துகளில் இன்று (15-ந் தேதி) கூடுகிற கிராம சபை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் பங்கேற்று விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்கிற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
இக்கிராமசபைக் கூட்டங்களில் காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்கள், முன்னாள் - இன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், பல்வேறு பிரிவுகளின் தலைவர்கள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், வட்டாரத் தலைவர்கள் தங்கள் சொந்த கிராமங்களில் நடைபெறுகிற கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று மேற்கண்ட தீர்மானத்தினை நிறைவேற்றி அதன் நகலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இதன்மூலம் கிராம சபைகளின் செயல்பாட்டை உறுதி செய்திடுவோம்.
ராஜீவ்காந்தி உருவாக்கிய பஞ்சாயத்து ராஜ் அமைப்பு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. அவரது கனவை நனவாக்குவதே நமது நோக்கமாகும். அந்த நோக்கத்தை அடைய கிராம சபைகளை நோக்கி நமது பயணம் தொடரட்டும். அதன்மூலம் உள்ளாட்சிகளில் நல்லாட்சி அமையட்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.