திருநெல்வேலி: ஒரே நாளில் 28 கிலோ கஞ்சா பறிமுதல்- 7 பேர் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் மற்றும் ராதாபுரம் காவல் நிலைய சரகங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
கஞ்சா பறிமுதல், 7 பேர் கைது.
Published on

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்ட போலீசாரின் போதைப்பொருட்களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கை மூலம் ஒரே நாளில் 2 வழக்குகளில் 28 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து, 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, போலீசார் தொடர்ந்து ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அம்பாசமுத்திரம்

அதன் தொடர்ச்சியாக நேற்று (25.08.2026) அம்பாசமுத்திரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அம்பாசமுத்திரம் ஆற்றுப்பாலம் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வெள்ளாங்குழி பகுதியைச் சேர்ந்த செந்தில் (வயது 42), ஆலங்குளம், நெட்டூரைச் சேர்ந்த கருப்பசாமி(35), திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சூர்யா(20) மற்றும் A.மருதப்பபுரத்தைச் சேர்ந்த செல்வம்(20) ஆகிய 4 பேரையும் போலீசார் சோதனை செய்தனர்.

22 கிலோ கஞ்சா பறிமுதல்; 4 பேர் கைது

அப்போது அவர்களிடம் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 கிலோ கஞ்சா கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 4 பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

ராதாபுரம்

இதேபோல் ராதாபுரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கால்கரை அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த திருநெல்வேலி மாவட்டம், கால்கரையைச் சேர்ந்த முருகன்(24), தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த விஷ்ணு(22) மற்றும் கணேஷ் அரவிந்த்(21) ஆகிய 3 பேரையும் போலீசார் சோதனை செய்தனர்.

6 கிலோ கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது

அப்போது அவர்களிடம் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 கிலோ கஞ்சா கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து ராதாபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 3 பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

பாளை மத்திய சிறையில் அடைப்பு

திருநெல்வேலி மாவட்ட போலீசாரின் தீவிர போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் மூலம் நேற்று ஒரே நாளில் அம்பாசமுத்திரம் மற்றும் ராதாபுரம் காவல் நிலைய சரகங்களில் மொத்தம் 28 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 7 பேர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலும் தடுக்க, எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி அறிவுறுத்தலின்பேரில், போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com