திருநெல்வேலி: மதுபோதையில் ஆட்டோ ஓட்டி 5 சிறுவர்களுக்கு காயம்- டிரைவர் கைது

மது போதையில் வாகனம் ஓட்டுவது சமூகத்திற்கு எதிரான, பிறர் உயிருக்கும் உடலுக்கும் ஆபத்து ஏற்படுத்தும் கொடிய செயலாகும் என்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி: மதுபோதையில் ஆட்டோ ஓட்டி 5 சிறுவர்களுக்கு காயம்- டிரைவர் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைகுறிச்சி, கோட்டைவிளை தெருவை சேர்ந்த சந்தானபாரதி (வயது 31) நேற்று மாலை, தனக்கு சொந்தமான ஆட்டோவில் பள்ளி குழந்தைகளை ஏற்றிக் கொண்டு, கல்லிடைகுறிச்சி, ஆத்தியடி விலக்கு அருகே செல்லும்போது ஆட்டோ கவிழ்ந்தது. அந்த ஆட்டோவில் பயணம் செய்து, காயமடைந்த 5 பள்ளி குழந்தைகள் மீட்கப்பட்டு, உடனடியாக கல்லிடைகுறிச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் ஆட்டோவினை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் மது போதையில் இருந்த விபரம் தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து கல்லிடைகுறிச்சி காவல் நிலையத்தில், காயம்பட்ட குழந்தைகளில் ஒருவரின் தந்தை புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், கொலையாகாத மரணம் விளைவிக்கின்ற குற்ற முயற்சிக்கான பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஆட்டோ டிரைவர் குடிபோதையில் தன்னால் இயல்பாக வாகனத்தை இயக்க இயலாது என்பதை நன்கு அறிந்தும், தான் செய்யக்கூடிய செயலால் ஆட்டோவில் பயணம் செய்யும் குழந்தைகளின் உடலுக்கும், உயிருக்கும் தீங்கு ஏற்படும் என்பதை நன்கு அறிந்தும், ஆட்டோவினை ஒட்டி அதன் மூலம் பள்ளி குழந்தைகளுக்கு காயத்தினை ஏற்படுத்திய செயலை செய்து, அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். போலீசாரின் புலன் விசாரணையை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனர் சந்தானபாரதி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குடிபோதையில் வாகனம் ஓட்டுவோர், தங்களின் செயலால், பிறர் உயிருக்கும் உடலுக்கும் தீங்கு ஏற்படும் என்பதனை நன்கு அறிந்தே, அப்படி செய்கிறார்கள். இதற்கு, அஜாக்கிரதை குற்றம் என்று மட்டும் சாதாரணமாக நடவடிக்கை எடுக்காமல், கொலையாகாத மரணம் விளைவிக்கின்ற குற்ற பிரிவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், குடிபோதையில் வாகனம் ஓட்டி பிறருக்கு காயம் ஏற்படுத்தும் சம்பவங்கள், கொலையாகாத மரணம் விளைவிக்கின்ற முயற்சி வழக்காக மாற்றி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கான அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

மது போதையில் வாகனம் ஓட்டுவது சமூகத்திற்கு எதிரான, பிறர் உயிருக்கும் உடலுக்கும் ஆபத்து ஏற்படுத்தும் கொடிய செயலாகும். பொதுமக்கள் தங்கள் உயிருக்கும், பிறரின் உயிரின் பாதுகாப்பிற்கும், மது போதையில் வாகனம் ஓட்டாமல் சட்டப்படி பொறுப்புடன் நடக்க வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com