

திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 98 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் போதைப்பொருட்களின் புழக்கத்தை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட எஸ்.பி. விஸ்வேஸ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி உத்தரவின் பேரில், கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது போலீசார் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, மூலைக்கரைப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த சின்ன மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்த ரவி (வயது 25), சூர்யா(24), பேச்சிமுத்து(33) மற்றும் நாங்குநேரி வட்டம், பெருமாள்நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(19) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இதேபோல், திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்த மாரிமுத்து(25) என்பவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
மேற்சொன்ன 5 பேரும் கஞ்சா விற்பனை போன்ற சட்டவிரோத குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், மூலைக்கரைப்பட்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் ஆகியோர், மேற்சொன்ன நபர்கள் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் பரிந்துரை செய்தனர்.
அதன்பேரில் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஸ்வேஸ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி பரிந்துரையின் பேரில், திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பித்தார். அதைத் தொடர்ந்து, மேற்சொன்ன 5 பேரும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 98 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.