கல்வி உதவி தொகை தருவதாக கூறி மோசடி: திருநெல்வேலி சைபர் கிரைம் போலீஸ் தகவல்

கல்வி உதவி தொகை என்பது சம்மந்தப்பட்ட மாணவர்களின் வங்கிக்கணக்கிற்கு மத்திய, மாநில அரசால் மாணவர்களின் பள்ளி வாயிலாக மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன.
திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
செல்போன் வாயிலாக தொடர்பு கொண்டு கல்வி துறை அலுவலகத்தில் இருந்து கல்வி உதவி தொகை தருவதாகக் கூறி மோசடிகள் நடைபெற்று வருகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் பெற்றோர்களைக் குறிவைத்தும் பள்ளியை முடித்துவிட்டு இரண்டு அல்லது மூன்று வருடங்கள் கழித்த மாணவர்களின் பெற்றோர்களைக் குறிவைத்தும் இந்த மோசடி நடைபெற்று வருகிறது.
மோசடியாளர்கள் பள்ளி/கல்லூரி மாணவர்களின் பெயர், பள்ளி விபரங்களை சரியாகக் கூறி நம்பிக்கை வரும்படி பேசி பெற்றோரின் Whatsapp எண்ணிற்கு QR Code ஒன்றை அனுப்புகின்றனர். அந்த QR Code-ஐ பெற்றோரின் Google pay / Phone pe வழியாக Scan செய்தும், PIN நம்பரை கேட்டும், அதன் மூலம் பணமோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு PIN நம்பரை கேட்பவர்கள் மோசடியாளர்கள் என பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் இதில் பணம் வரும் என நம்பி சில மாணவர்களின் பெற்றோர் ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.
கல்வி உதவி தொகை என்பது சம்மந்தப்பட்ட மாணவர்களின் வங்கிக்கணக்கிற்கு மத்திய/மாநில அரசால் மாணவர்களின் பள்ளி வாயிலாக மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. பள்ளியை முடித்துச் சென்று தற்போது கல்லூரியில் படித்துவரும் அல்லது வேலையிலிருக்கும் அல்லது படிக்காத மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்பதைக் கேட்டு யாரும் ஏமாற வேண்டாம். இது போன்று கல்வித்துறையில் இருந்து பேசுவதாக கூறி ஏமாற்றும் சமுக விரோதிகளிடம் மக்கள் வழிப்புணர்வாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அழைப்பு வந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையம் மற்றும் மாணவர் பயிலும் பள்ளிக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இது போன்று சைபர் குற்றங்கள் நடைபெற்றால் சைபர் குற்ற இணையதளத்தில் www.cybercrime.gov.in அல்லது 1930 என்ற Toll Free எண்ணிற்கு அழைத்து உடனடியாக தங்களுடைய புகாரினை பதிவு செய்யுமாறு திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






