திருநெல்வேலி: கொலை வழக்கில் 10 ஆண்டுகள் தலைமறைவான குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியில் ஏலச்சீட்டு எடுப்பதில் ஏற்பட்ட பிரச்சினையின் முன்விரோதம் காரணமாக ஒரு நபரை அதே பகுதியைச் சேர்ந்த 2 பேர் சேர்ந்து கொலை செய்தனர்.
கொலை வழக்கில் 10 ஆண்டுகள் தலைமறைவான குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை.
Published on: 

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே நடந்த கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த முதலாவது குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஏலச்சீட்டு பிரச்சினையில் கொலை

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு பிரம்மதேசம் பகுதியைச் சேர்ந்த குமார் (வயது 51) என்பவரை ஏலச்சீட்டு எடுப்பதில் ஏற்பட்ட பிரச்சினையின் முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த மாயம்பெருமாள்(60) மற்றும் காசிமணி ஆகியோர் சேர்ந்து கொலை செய்தனர். இது தொடர்பாக அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி புலன் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்தார்.

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது, திருநெல்வேலி நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது இரண்டாவது குற்றவாளியான காசிமணி என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். ஆனால் அந்த தீர்ப்பின்போது முதல் (A1) குற்றவாளியான மாயம்பெருமாள் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 10 ஆண்டுகளாக தலைமறைவானார்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த முதல் குற்றவாளி மாயம்பெருமாள் மீதான வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டுகள் முழுமையாக நிருபிக்கப்பட்டு நீதிபதி கதிரவன் நேற்று (30.10.2026) குற்றவாளிக்கு தண்டனை வழங்கினார்.

கொலை வழக்கில் முதலாவது குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

IPC 302-ன்படி ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம், IPC 506(ii)-ன்படி 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்சொன்ன தண்டனைகளை குற்றவாளி ஏககாலத்தில் (Concurrent) அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டார்.

எஸ்.பி. பாராட்டு

இந்த வழக்கில் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த அம்பாசமுத்திரம் உட்கோட்ட டி.எஸ்.பி. கணேஷ்குமார், அம்பாசமுத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல், இவ்வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி (தற்போது DSP, சென்னை மாநகரம்) வழக்கின் விசாரணைக்கு உதவி செய்த நீதிமன்ற காவலர் செல்வி மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர சிறப்பாக வாதிட்ட அரசு வழக்கறிஞர் கண்ணன் ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷவேஷ் பா.சாஸ்திரி பாராட்டினார்.

கொலை வழக்கில் 16 பேருக்கு ஆயுள் தண்டனை

2026-ம் ஆண்டில் இதுவரை 9 கொலை வழக்குகளில் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு 19 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதில் 8 சரத்திர பதிவேடு உடைய குற்றவாளிகள் உள்பட 16 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட காவலதுறையானது, நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரும் முனைப்பில் தொடர்ந்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

X