திருநெல்வேலி: திருட்டு வழக்கு குற்றவாளி 8 ஆண்டுகளுக்கு பிறகு கைது


திருநெல்வேலி: திருட்டு வழக்கு குற்றவாளி 8 ஆண்டுகளுக்கு பிறகு கைது
x

உவரியில் நடந்த திருட்டு வழக்கில் சம்பவ இடத்தில் கிடைத்த குற்றவாளியின் கைரேகையானது, விஜயநாராயணம் பகுதி திருட்டு சம்பவ இடத்தில் கிடைத்த கைரேகையுடன் ஒத்துப்போனது.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணம் காவல் நிலைய சரகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு திருமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நசரேன் மகன் அலெக்ஸ் ரீகன் வீட்டில் கதவினை உடைத்து தங்க நகைகள் மற்றும் பணம் திருட்டு நடைபெற்றது. இது சம்பந்தமாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில் விஜயநாராயணம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் பற்றிய விபரம் புலப்படாமல் நிலுவையில் இருந்து வந்தது.

இந்த நிலையில் உவரி காவல் நிலைய சரகத்தில் நடைபெற்ற திருட்டு வழக்கில் சம்பவ இடத்தில் கிடைக்கப்பெற்ற குற்றவாளியின் கைரேகையானது, மேற்சொன்ன விஜயநாராயணம் சம்பவ இடத்தில் கிடைக்கப்பெற்ற கைரேகையுடன் ஒத்துப்போனது. இதனால் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி சோமநாதபேரி மரியதாசன் மகன் ஜெயராஜ் என தெரியவந்தது. இதனையடுத்து நாங்குநேரி ஏ.எஸ்.பி. பிரசன்னகுமார் தலைமையில் விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் தனிப்படையினர் சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

சுமார் 8 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கில், தொழில்நுட்ப உதவியுடன் குற்றவாளியை அடையாளம் கண்டு கைது செய்து நடவடிக்கை எடுத்த நாங்குநேரி ஏ.எஸ்.பி. மற்றும் விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் தனிப்படையினரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.

1 More update

Next Story