திருநெல்வேலி: இரு தரப்பினர் இடையே பிரச்சினையை தூண்டும் பதிவு- வாலிபர் கைது

பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம், முக்கூடல், பாண்டியாபுரம் தெருவை சேர்ந்த நாகராஜன் மகன் சதீஷ்குமார் (வயது 22), சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இருதரப்பினருக்கிடையே பிரச்சினையை தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய வசனங்கள் வைத்து கையில் அரிவாளுடன் வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளார். இதுகுறித்து முக்கூடல் காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஆக்னல் விஜய் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சமூக வலைத்தளங்களில் இரு தரப்பினரிடையே பிரச்சினையை தூண்டும் விதமாக வீடியோவை வெளியிட்ட சதீஷ்குமாரை நேற்று (12.5.2025) கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தார்.
திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினர் சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். இதுபோன்று பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.






