திருநெல்வேலி: 7 சவரன் தங்க செயின், பணம் திருடிய வாலிபர் கைது

திருநெல்வேலி மாவட்டம் உவரி பகுதியில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் 7 சவரன் தங்க செயின், பணம் திருடியது தெரியவந்தது.
திருநெல்வேலி மாவட்டம், உவரி, குட்டம், மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சிவராம் (வயது 51) என்பவர் திசையன்விளை உள்ள ஒரு மிட்டாய் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். 31.5.2025 அன்று வழக்கம் போல் சிவராம் வேலைக்கு செனறுள்ளார். மேலும் அவரது மனைவி அன்று வீட்டை பூட்டி விட்டு ஒரு துக்க வீட்டிற்கு சென்றுள்ளார். பின் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவின் உள்ளே இருந்த 7 சவரன் தங்க செயின் மற்றும் ரூ.2,500 பணத்தை காணவில்லை.
இதுகுறித்து சிவராம் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் உவரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் விசாரணை மேற்கொண்டார். அதில் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரத்தை சேர்ந்த குழந்தைவேல்(30) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் குழந்தைவேலை நேற்று முன்தினம் (2.6.2025) கைது செய்து, அவரிடமிருந்து மேற்சொன்ன திருடிய பொருட்களை பறிமுதல் செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுத்தனர்.






